இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
உயிர்த்தியாகி என்பதால் இறைநேசர் எனலாமா?
ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்துடன் இணைந்து போரிட்டார். அப்போரில் அவர் கொல்லப்பட்டார். அவர் சொர்க்கவாசி என்று நபித்தோழர்கள் கூறியதை நபியவர்கள் கண்டித்துள்ளார்கள்.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறிக்கொண்டே வந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 182
இது போல் அமைந்த மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அவர் நரகவாசியாவார்'' என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், "நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அவர், "சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி "அவர் நரகவாசி' என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), "உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்'' என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின்ன் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 2898
உயிரைத் தியாகம் செய்வதற்கு நிகரான நல்லறம் ஏதும் இல்லை. அத்தகைய ஷஹீதுகள் குறித்து நபித்தோழர்கள் எடுத்த முடிவு தவறாகி விட்டதென்றால் நாம் கொடுக்கும் மகான்கள் பட்டம் எப்படிச் சரியாக இருக்க முடியும்?
குளிக்காதவர், பல் துலக்காதவர், ஜடா முடி வளர்த்தவர், மஸ்தானாக (போதையாக) திரிந்தவர், தலைவாரிக் கொள்ளாமல் அலங்கோலமாக வருபவர், பீடி அடிப்பவர் போன்றவர்களுக்கெல்லாம் அவ்லியா பட்டம் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை.
நல்லடியார்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்குவதாக இருந்தால் தனது தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருப்பான். ஆனால் வஹீயின் மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தவர்கள் தவிர நபிகள் நாயகத்தால் நல்லடியார் என்று கருதப்பட்ட சிலர் மகா கெட்டவர்களாக இருந்துள்ளனர்.
No comments:
Post a Comment