இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
மூன்று சாரார் விஷயத்தில் தவறிய மக்கள் கணிப்பு!
இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதன் முதலில் (இறைவழியில் உயிர் துறந்த) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போரிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர் முகங்குப்புற விழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும். பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் அல்லாஹ் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம் "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் "நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக் கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது'' என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும். அதன் பின்னர் செல்வந்தர் ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரிடம், "நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?'' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர் "நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை'' என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் "நீ பொய் சொல்கிறாய். வாரி வாரி வழங்குபவர் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது'' எனக் கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்குப்புற விழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும்.
நூல்: முஸ்லிம் 3527
உயிர்த் தியாகம் செய்தவரை நல்லடியார் என்று மக்கள் கருதுவார்கள். அவரும் நாம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டிருக்கிறோம்; அல்லாஹ்விற்காகத் தான் உயிரைத் தியாகம் செய்திருக்கிறோம் என்று நினைத்திருப்பார். ஆனால் அல்லாஹ், "உன்னுடைய உள்ளம் தூய்மையாக இல்லை. நாம் கொல்லப்பட்டால் வரலாற்றில் இடம் பிடிப்போம், நமது பெயர் நிலைத்து நிற்கும், நம்மை தியாகி என்று மக்கள் பாராட்டுவார்கள் என்பதற்காகத் தான் இதைச் செய்தாய்' என்று கூறி அவரை அல்லாஹ் நரகத்தில் தள்ளுகிறான்.
உயிரைத் தியாகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உலகத்தில் மனிதன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சொத்து, சுகம் என்று எதையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். உயிரை விடுவதற்கு யாரும் அவ்வளவு எளிதாக முன்வர மாட்டார்கள்.
ஆனால் தன்னுடைய உயிரையும் தியாகம் செய்த ஒருவருடைய நிலை மறுமையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. உள்ளம் தூய்மையாக இல்லாத காரணத்தினால் இவர் அல்லாஹ்விடத்தில் இறைநேசர் என்னும் சிறப்பை அடைய முடியாதவராக ஆகிவிட்டார். நம்முடைய பார்வையில், நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்து, பதவி இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போய்விட்டது. இன்று நாம் யாரையெல்லாம் அவ்லியா, இறைநேசர் என்று சொல்கிறோமோ அவர்கள் இந்த உயிர்த் தியாகிக்குச் சமமாவார்களா?
அதுபோல் பொருளாதாரத்தை வாரி வழங்கியவரையும், மார்க்கத்தை மக்களுக்குப் போதித்த அறிஞரையும் அந்தக் கால மக்கள் நல்லவர்கள் என்று தான் கருதி இருப்பார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அவர்கள் ன் நரகவாசிகள் பட்டியலில் இடம்பெறுகிறார்கள் என்றால் அவ்லியா பட்டம் வழங்கும் வேலை நமக்குத் தேவையா?
இறைநேசர்கள் யார் என்பதை நாம் கண்டுபிடிக்க முடியும் என்ற கருத்துடையோர் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
ஒருமுறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "உறுதியாகி விட்டது'' எனக் கூறினார்கள். உமர் (ரலி) "எது உறுதியாகி விட்டது?'' எனக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1367
மக்கள் யாரை இறைநேசர் என்கிறார்களோ அவர்கள் தான் இறைநேசர்கள் என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இதனடிப்படையில் இறைநேசர்களை நாம் கண்டறிய முடியும் என்று வாதிடுகின்றனர்.
இந்த ஹதீஸ் மேலோட்டமாக இக்கருத்தைத் தருகிறது என்றாலும் இதன் சரியான பொருள் மற்றொரு ஹதீஸில் கிடைக்கிறது.
அதைப் பார்ப்பதற்கு முன் இந்த ஹதீஸின் கருத்தை அப்படியே ஏற்றால் ஏற்படக் கூடிய விபரீதங்களை அறிந்து கொள்வோம்.
இறைநேசர்கள் யார் என்பதை மனிதர்கள் கண்டறிய முடியாது என திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறிய வசனங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த வசனங்களுக்கு எதிராக இக்கருத்து அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைநேசர்கள் என்றும் நல்லவர்கள் என்றும் யாரைப் பற்றிக் கூறினார்களோ அவர்களில் சிலர் அல்லாஹ்விடம் நல்லடியார்களாக இருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்திய ஹதீஸ்களை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். அந்த ஹதீஸ்களுக்கும் இது முரணாக அமைந்துள்ளது.
மக்களெல்லாம் யாரை ஷஹீத் என்றும் ஆலிம் என்றும் வள்ளல் என்றும் கருதினார்களோ அவர்கள் கெட்டவர்களாகக் கருதப்பட்டு நரகில் போடப்படுவார்கள் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அந்தக் கருத்துடன் நேரடியாக இந்த ஹதீஸ் நேரடியாக மோதுகின்றது.
போர்க்களத்தில் உயிர் தியாகம் செய்த தோழரைப் பற்றி எல்லா நபித்தோழர்களும் ஷஹீத் என்று கூற அதை நபியவர்கள் மறுத்தார்கள் என்று இரு ஹதீஸ்களை வெளியிட்டோம். அதற்கு மாற்றமாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
பெரும்பாலான மக்கள் சொல்வதால் அது சரியாகிவிடாது என்று திருக்குர்ஆன் 6:116, 7:187, 12:21, 12:40, 12:68, 16:38, 25:50, 30:6, 30:30, 34:28, 34:36, 40:57, 45:26 ஆகிய வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். அதற்கு முரணாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
மேலும் நடைமுறையில் நாம் பார்க்கும் போது கெட்டவர்களைத் தான் மக்கள் பெரும்பாலும் நல்லடியார் என்று கூறுவதைக் காண்கிறோம்.
நபிகள் நாயகத்தைப்ம் பின்பற்றினால் தான் ஒருவர் இறைநேசராக முடியும்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 3:31
நபிவழியைப் புறக்கணித்து திருமணம் செய்யாதவர்களையும், குளித்து தூய்மையாக இல்லாதவர்களையும், சடை வளர்த்து திரிபவர்களையும், கஞ்சா அடிக்கும் பீடி மஸ்தான்களையும், தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை புறக்கணிப்பவர்களையும், மனநோயாளிகளையும் அவ்லியா என்று மக்கள் கூறுவதைப் பார்க்கின்றோம். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த மார்க்கத்தை அறவே பேணாத பிரமுகர்களை மகான்கள் என்று கொண்டாடுவதை சமீபத்தில் பார்த்தோம்.
மக்கள் இது விஷயத்தில் சரியாக முடிவு எடுப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது. அந்த உண்மைக்கு மாற்றமாகவும் இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.
குர்ஆனுக்கும் வலிமையான பல ஹதீஸ்களுக்கும் முரணாக இது இருப்பதால் இதை மறுக்க வேண்டும் என்றாலும், இதற்கு வேறு பொருள் கொடுக்க வழியுள்ளதால் நாம் மறுக்கத் தேவை இல்லை.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், "இது யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும், இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராகவும், அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும், அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராகவும், இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், "உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "பூமியில் அல்லாஹ்விற்கென்று சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்'' என்று கூறினார்கள்.
நூல்: ஹாகிம், பாகம்:1, பக்கம்: 533
நல்லவர்கள் என்றும், கெட்டவர்கள் என்றும் மக்கள் கூறியது அவர்களின் சொந்தக் கருத்து அல்ல. வானவர்கள் அம்மக்களின் நாவுகளில் பேசியதால் அந்தத் தீர்ப்பு சரியாக இருந்தது என்று இந்த ஹதீஸ் விளக்குகிறது.
யாருடைய நாவுகளில் வானவர்கள் பேசுகிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது. அது அல்லாஹ்வின் தூதருக்கு மட்டும் அல்லாஹ் கொடுத்த ஞானமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்கள் ஷஹீத் என்று சிலருக்குப் பட்டம் சூட்டிய போது அது வானவர்கள் பேசியது அல்ல என்று நபிகளுக்குத் தெரியவந்ததால் அவர்களை நரகவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேற்கண்ட இரு ஜனாஸாக்கள் பற்றி மக்களின் நாவுகளில் வானவர்கள் பேசுகிறார்கள் என்று நபியவர்களுக்குத் தெரியவந்ததால் உறுதியாகி விட்டது என்றார்கள் என்று இந்த ஹதீஸில் இருந்து நாம் விளங்கலாம்.
மனிதர்களின் நாவுகளில் வானவர்கள் பேசுகிறார்களா என்பதை அறிந்து கொள்ளும் நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துடன் முடிந்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் உலகமே சேர்ந்து ஒருவரை ந்ல்லடியார் என்று கூறினாலும் அவர் அல்லாஹ்விடம் நல்லடியார் பட்டியலில் உள்ளவர் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.
இது நம்முடைய காலத்திற்குப் பொருந்தாது என்று விளங்கிக் கொண்டால் நம்மிடம் இது போன்ற தவறுகள் வராது. நாமும் யாரையும் நல்லவர் என்று சொல்லவும் மாட்டோம்.
No comments:
Post a Comment