13 . கேள்வி :
பயணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா?
பதில் :
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ
بْنَ الْخَطَّابِ، جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، فَجَعَلَ
يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ
حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا ". فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ
لِلصَّلاَةِ، وَتَوَضَّأْنَا لَهَا فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ،
ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ
அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே, சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.
அறிவிப்பவர் – ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்கள் – புகாரி 596, முஸ்லிம் 1000, திர்மிதி 164, நஸயீ 1349
இந்த ஹதீஸில் குறைஷிக் காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களின் அஸர் தொழுகையை தாமதப் படுத்தி விட்ட போது, மக்ரிப் தொழுகை நேரம் வந்த பிறகும் கூட, தவற விட்ட அஸர் தொழுகையை முதலில் நிறைவேற்றி விட்டுப் பின்னர் தான் மக்ரிப் தொழுகின்றார்கள். இந்த அடிப்படையில் லுஹரைத் தொழுத பிறகே அஸர் தொழ வேண்டும்.
பள்ளியில் அஸர் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அந்த ஜமாஅத்திலேயே சேர்ந்து லுஹர் தொழுகையை நிறைவேற்ற அனுமதி உள்ளது.அதன் பின்னர் தனியாக அஸர் தொழுது கொள்ள வேண்டும். அஸர் தொழுதுவிட்டு லுஹர் தொழுவதற்கு அனுமதி இல்லை.
மேற்கண்ட ஹதீஸில், அஸர் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு நிறைவேற்றியிருப்பதால் இதை வைத்துக் கொண்டு தொழுகைகளை களா செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
ஏனெனில் மேற்கண்ட இதே அறிவிப்பு நஸயீயில் 655 ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், போர்க் காலங்களில் தொழுவது சம்பந்தமான (4 - 102) வசனம் அருளப்படுவதற்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பிறகு அவ்வாறு தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment