பொருளாதாரம் மட்டும்தான் செல்வமா?
பொருளாதாரம் திரட்டுவதில் எந்த நெறிமுறையையும் பேணவேண்டியதில்லை என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு அல்லாஹ் எல்லா இன்பங்களையும் வழங்கியுள்ளதாகவும் நல்லவர்களுக்கு ஒரு இன்பத்தையும் வழங்கவில்லை என்றும் நம்புவதுதான்.
இறைவன் அளித்துள்ள நற்பேறுகள் கோடாணு கோடிகள் உள்ளன. ஆனால் பொருளாதாரம் மட்டுமே பாக்கியம் என்று கருதுவதால்தான் இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது.
ஒருவனுக்குப் பல்லாயிரம் கோடி பண வசதி இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையைக் கவனித்தால் அவனது வாழ்க்கை நூறு சதவிகிதம் நிறைவாக இருக்காது. எத்தனையோ பணக்காரர்கள் தம்மிடம் உள்ள பணத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பதைக் காண்கிறோம்.
உயர்தரமான உணவை அவர்கள் சாப்பிட முடியாத அளவுக்குப் பல நோய்கள் அவர்களுக்கு இருக்கும். முக்கியமான பல உறுப்புக்கள் செயல்படாத நிலைக்குச் சென்று விடும். தனது முழுச் சொத்தையும் செலவிட்டாலும் அதைச் சரி செய்ய முடியாது.
ஆனால் ஒரு ஏழை எதையும் சாப்பிட முடியும். அவனது உடல் உறுப்புக்கள் அனைத்தும் சீராக இருக்கும். மருத்துவத்துக்காக பெரிய அளவில் செலவு செய்யும் நிலை இருக்காது. செல்வந்தரின் நிலையை விட நமது நிலை இந்த வகையில் மேலானது என்று அவன் சிந்தித்தால் அவனுக்கு எந்தத் தடுமாற்றமும் ஏற்படாது.
உலகில் எந்த மனிதனுக்கும் நூறு சதவிகித பாக்கியங்கள் வழங்கப்படவில்லை. குறைகளும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன.
சிலருக்குப் பணத்தில் குறை இருந்தால் மற்றும் சிலருக்கு ஆரோக்கியத்தில் குறை இருக்கும். மனநிம்மதியில் குறை இருக்கும். குழந்தையின்மை என்ற குறை வேறு சிலருக்கு இருக்கும். மனைவி மக்களால் ஏற்படும் அவப்பெயர்கள் இன்னும் சிலருக்கு உள்ள குறையாக இருக்கும்.
சிந்தித்துப் பார்த்தால் செல்வத்தை விட பெரும் பாக்கியங்கள் உலகில் இருப்பதையும், எத்தனையோ செல்வந்தர்களுக்குக் கொடுக்காத அந்த பாக்கியங்களை அல்லாஹ் தனக்கு வழங்கியுள்ளான் என்பதையும் ஒருவன் அறிந்து கொள்ள முடியும்.
கோடிகளுக்கு அதிபதிகள் பலரை நாம் பார்க்கிறோம். விரும்பிய அனைத்தையும் அனுபவிக்கும் அளவுக்கு அவர்களிடம் செல்வம் குவிந்து கிடக்கும். ஆனால் அவர்கள் இனிப்பு, இறைச்சி, மற்றும் கொழுப்புச் சத்துள்ள பல உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் அவர்கள் வீட்டில் அற்ப ஊதியத்திற்காகப் பணி செய்யும் ஊழியர்கள் விரும்பிய உணவை எல்லாம் சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருப்பதைக் காண்கிறோம். இது பணத்தை விட மாபெரும் பாக்கியம் அல்லவா?
எந்த மனிதனுக்கும் அனைத்து பாக்கியங்களும் வழங்கப்படவே இல்லை. அல்லாஹ் சிலருக்குப் பணத்தை வழங்கி ஆரோக்கியத்தைக் குறைத்து விடுகிறான். ஆரோக்கியத்தைக் குறைவில்லாமல் கொடுத்து குழந்தைப் பேறு இல்லாமல் ஆக்கி விடுகிறான். குழந்தைப் பேறைக் கொடுத்து வேறு ஏதேனும் சில குறைகளை அமைத்து விடுகிறான்.
இறைவன் எத்தனையோ குறைகளை நமக்குத் தராமல் வறுமை என்ற குறையைத் தந்துள்ளான் என்று புரிந்து கொண்டால் வறுமை ஒரு பிரச்சனையே அல்ல என்ற மன நிம்மதி நமக்குக் கிடைக்கும்.
மனிதனின் இந்த மனநிலையை அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறான்.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 89 : 15, 16
இந்த வாழ்க்கைப் பாடத்தைப் படித்துக் கொண்டால் நல்லவர்களாக வாழ்ந்து நாம் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறோம் என்று ஒருவன் எண்ண மாட்டான். நமக்குப் பணக் கஷ்டம் இருப்பது போல் மற்றவர்களுக்கு வேறு விதமான கஷ்டங்கள் உள்ளன என்று வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளும்போது நல்லவனாக வாழ்வதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வான்.
No comments:
Post a Comment