Tuesday, December 6, 2016

பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது?



பேராசையில் இருந்து எப்படி விடுபடுவது?
பேராசையில் இருந்து எப்படி விடுபடலாம்? இதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர்.
நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்தைத் திரட்டினாலும் அது உண்மையில் நம்முடையது அல்ல. பல கோடிகளுக்கு அதிபதியாக இருப்பவர் அனைத்தையும் சாப்பிட முடியாது. அனைத்தையும் அனுபவித்து விட முடியாது. ஒரு அந்தஸ்து இதனால் கிடைக்குமே தவிர அனைத்தையும் யாராலும் அனுபவிக்க முடியாது.
ஒரு அளவுக்கு மேல் பணத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. இதை உணர்ந்து கொண்டால் பொருளாதாரத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது எளிதாகி விடும்.
7609 - حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ قَالَ أَتَيْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقْرَأُ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) قَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِى مَالِى - قَالَ - وَهَلْ لَكَ يَا ابْنَ آدَمَ مِنْ مَالِكَ إِلاَّ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ.
 "மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது'' என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி)
நூல் : முஸ்லிம் 7609
இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம்.
என்னதான் பணத்தைத் திரட்டினாலும் மரணம் வந்து விட்டால் நாம் அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவோம் என்று புரிந்து கொள்வதும் பேரசையை ஒழிக்கும்.
பேராசைப்பட்டு செல்வத்தின் பின்னே நாம் அலைந்து கொண்டிருந்தால் எந்த நேரத்திலாவது போதும் என்று நாம் நினைப்போமா? ஒருக்காலும் நினைக்க மாட்டோம். ஒரு கோடி கிடைக்கும் வரை அதுவே இலட்சியமாக இருக்கும். ஒரு கோடி கிடைத்து விட்டால் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட மாட்டோம். இரண்டு கோடிக்கு அலைய ஆரம்பித்து விடுவோம். பல லட்சம் கோடிகளில்கூட நாம் திருப்தி அடைய மாட்டோம். முடிவே இல்லாத இந்தப் போக்கு ஒரு வகை மனநோய் என்றுதான் கூற வேண்டும்.
அனைத்தையும் அனுபவிக்கவும் முடியாது. அதைப் பாதுகாக்கவும் முடியாது. எந்தக் கட்டத்திலும் திருப்தி அடையவும் முடியாது என்று தெரிந்து கொண்டே அதன் பின்னே அலைவது மனநோய்தான்.
இதனால்தான் மனைவி, மக்கள், இன்ன பிற கடமைகளைக்கூட மனநோயாளி மறப்பதைப் போல் சிலர் மறந்து பணத்திற்காக அலைய ஆரம்பித்து விடுகின்றனர்.
6439 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ لِابْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு ஓடை இருந்தால் தனக்கு இரண்டு தங்க ஓடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 6439, 6436
செல்வம் அவசியம் என்ற போதும் அதைவிட முக்கியமான கொள்கைக்காக செல்வத்தைத் தூக்கியெறியவும் முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. இப்படி கொள்கைக்காக செல்வத்தையும், வசதி வாய்ப்புகளையும் தூக்கி எறிந்த ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்களை உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் கூறுவதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
"என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 66:11
கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்ன் என்பவன் தன்னைக் கடவுள் என்று வாதிட்டபோது அவனது மனைவி ஆஸியா அவர்கள் அதை எதிர்த்தார்கள். மனிதன் கடவுளாக முடியாது; அகிலத்தைப் படைத்த மாபெரும் ஆற்றல் மிக்கவன்தான் கடவுள் என்று துணிந்து முழங்கினார்கள். பட்டத்து ராணி என்ற அடிப்படையில் இவ்வுலகில் அனுபவித்து வந்த பல இன்பங்களை இதனால் இழக்க நேரும் என்று தெரிந்து கொண்டே கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். செல்வத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்கைக்காக செல்வத்தை தியாகம் செய்த இப்பெண்மணியை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கும் முன்மாதிரி என்று அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான்.

No comments:

Post a Comment