Friday, January 13, 2017

கடனை இழுத்தடிக்கக் கூடாது.



கடனை இழுத்தடிக்கக் கூடாது.
கடன் வாங்குவதில் இரண்டு நிலைகள் உள்ளன. எந்த வழியும் இல்லாமல் மிகவும் அவசியத் தேவைக்காக வாங்கும் கடன் ஒருவகை. இதைப் பெரும்பாலும் தவிர்க்க முடியாது. இப்படிப்பட்ட கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். அவர்கள் கடன் கொடுத்தவரிடம் அவகாசம் கேட்பது தவறில்லை.
வசதி படைத்தவர்களாக இருந்தால் தன்னிடம் உள்ள சொத்துக்கள் சிலவற்றை விற்று தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்ததாகும். அப்படியே கடன் வாங்கி விட்டால் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்திவிட முடியும் என்பதால் இவர்கள் அவகாசம் கேட்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.
வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் அவசியத் தேவைகளுக்காக கடன் வாங்குவதில்லை. இருக்கும் தொழிலைப் பெருக்குவதற்காகவும், ஒரு வீட்டை இரண்டு வீடுகளாக ஆக்குவதற்கும், ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்காகவும்தான் கடன் வாங்குகிறார்கள்.
கடன் வாங்கிய நிலையில் நாம் மரணித்து நம்முடைய வாரிசுகள் அந்தக் கடனை அடைக்கவில்லையானால் நாம் செய்த நன்மைகள் கடன் கொடுத்தவனுக்குப் போய் விடும் என்று அஞ்சி தவிர்க்க இயன்ற கடன்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2287 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَطْلُ الغَنِيِّ ظُلْمٌ، فَإِذَا أُتْبِعَ أَحَدُكُمْ عَلَى مَلِيٍّ فَلْيَتْبَعْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : செல்வந்தன் இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக் கொள்ளட்டும்!

நூல் : புகாரி 2287, 2288, 2400

நல்ல முறையில் திருப்பிக் கொடுத்தல்
கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது.
கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதன் பின்னர் கடன் கொடுத்தவன் கெஞ்சிக்கூத்தாடி வசூல் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். ஒரு முஸ்லிம் இவ்வாறு நடந்து கொள்ள அனுமதி இல்லை.
2305 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِنٌّ مِنَ الإِبِلِ، فَجَاءَهُ يَتَقَاضَاهُ، فَقَالَ: «أَعْطُوهُ»، فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلَّا سِنًّا فَوْقَهَا، فَقَالَ: «أَعْطُوهُ»، فَقَالَ: أَوْفَيْتَنِي أَوْفَى اللَّهُ بِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً»

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, "விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். "அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கின்றது'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2305, 2306, 2390, 2392, 2393, 2606, 2609
2097 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ، فَأَبْطَأَ بِي جَمَلِي وَأَعْيَا، فَأَتَى عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ «جَابِرٌ»: فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا شَأْنُكَ؟» قُلْتُ: أَبْطَأَ عَلَيَّ جَمَلِي وَأَعْيَا، فَتَخَلَّفْتُ، فَنَزَلَ يَحْجُنُهُ بِمِحْجَنِهِ ثُمَّ قَالَ: «ارْكَبْ»، فَرَكِبْتُ، فَلَقَدْ رَأَيْتُهُ أَكُفُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَزَوَّجْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «بِكْرًا أَمْ ثَيِّبًا» قُلْتُ: بَلْ ثَيِّبًا، قَالَ: «أَفَلاَ جَارِيَةً تُلاَعِبُهَا وَتُلاَعِبُكَ» قُلْتُ: إِنَّ لِي أَخَوَاتٍ، فَأَحْبَبْتُ أَنْ أَتَزَوَّجَ امْرَأَةً تَجْمَعُهُنَّ، وَتَمْشُطُهُنَّ، وَتَقُومُ عَلَيْهِنَّ، قَالَ: «أَمَّا إِنَّكَ قَادِمٌ، فَإِذَا قَدِمْتَ، فَالكَيْسَ الكَيْسَ»، ثُمَّ قَالَ: «أَتَبِيعُ جَمَلَكَ» قُلْتُ: نَعَمْ، فَاشْتَرَاهُ مِنِّي بِأُوقِيَّةٍ، ثُمَّ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلِي، وَقَدِمْتُ بِالْغَدَاةِ، فَجِئْنَا إِلَى المَسْجِدِ فَوَجَدْتُهُ عَلَى بَابِ المَسْجِدِ، قَالَ: «آلْآنَ قَدِمْتَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَدَعْ جَمَلَكَ، فَادْخُلْ، فَصَلِّ رَكْعَتَيْنِ»، فَدَخَلْتُ فَصَلَّيْتُ، فَأَمَرَ بِلاَلًا أَنْ يَزِنَ لَهُ أُوقِيَّةً، فَوَزَنَ لِي بِلاَلٌ، فَأَرْجَحَ لِي فِي المِيزَانِ، فَانْطَلَقْتُ حَتَّى وَلَّيْتُ، فَقَالَ: «ادْعُ لِي جَابِرًا» قُلْتُ: الآنَ يَرُدُّ عَلَيَّ الجَمَلَ، وَلَمْ يَكُنْ شَيْءٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ، قَالَ: «خُذْ جَمَلَكَ وَلَكَ ثَمَنُهُ»

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன். அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)? என்று கேட்டார்கள். என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்'' என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்து விட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். கன்னியையா? கன்னிகழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னிகழிந்த பெண்ணைத்தான் என்று நான் கூறினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள். நான், எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன் என்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப்போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக என்று கூறிவிட்டு பின்னர், உமது ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?'' என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்று விட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இப்போதுதான் வருகிறீரா?'' என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடைபோட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதை விட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை'' என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 2097, 2309
2603 - 
حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، فَقَضَانِي وَزَادَنِي»

பள்ளிவாசலில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.

நூல் : புகாரி 2603
கடன் வாங்கியவர் அதைத் திருப்பிச் செலுத்தும்போது சிறந்ததாகவும் அதிகமாகவும் செலுத்துவது விரும்பத்தக்கது என்பதை இதில் இருந்து அறிகிறோம்.
நம்முடைய பணம் ஒருவரிடம் இருக்கும் காலத்துக்கு ஏற்ப நிர்ணயித்த தொகையை வாங்குவதுதான் வட்டியாகும். நாம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கும்போது நாமாக விரும்பி பதினோராயிரமோ பதினைந்தாயிரமோ கொடுத்தால் அது வட்டியாகாது என்பதையும் இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
திருப்பித் தரும்போது கொஞ்சம் கூடுதலாகத் தரவேண்டும் என்று என்று கடன் கொடுத்தவர் நிபந்தனை போட்டால் அது வட்டியில் சேரும்.
கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை
கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே கொடுத்து விட்டேன் என்றும் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.
கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது மனிதனின் மனநிலை இப்படியெல்லாம் மாறிவிடுகிறது. ஆனால் ஒருவன் நல்ல முஸ்லிமாக இருந்தால் இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
ஆம் அல்லாஹ்வின் அருளால் கடனைத் திருப்பிக் கொடுக்கும் நிலையை நாம் அடைவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளனர்.
2387 - حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ الأُوَيْسِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ أَدَاءَهَا أَدَّى اللَّهُ عَنْهُ، وَمَنْ أَخَذَ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவர் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அல்லாஹ்வும் அவரை அழித்து விடுவான்.

நூல் : புகாரி 2387
 4687 - حدثنا محمد بن المثنى قال حدثنا وهب بن جرير قال حدثنا أبي عن الأعمش عن حصين بن عبد الرحمن عن عبيد الله بن عبد الله بن عتبة : أن ميمونة زوج النبي صلى الله عليه و سلم استدانت فقيل لها يا أم المؤمنين تستدينين وليس عندك وفاء قالت إني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول من أخذ دينا وهو يريد أن يؤديه أعانه الله عز و جل

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஒருவரிடம் கடன் கேட்டனர். மூமின்களின் அன்னையே கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லாத நீங்கள் கடன் கேட்கிறீர்களே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு மைமூனா (ரலி) திருப்பிச் செலுத்தும் எண்ணத்தில் யார் கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.

நூல் : நஸாயீ 

கடனை நிறைவேற்றிய பிறகே சொத்தைப் பிரிக்க வேண்டும்
ஒருவர் மரணித்த பின்னர் அவர் செய்த மரணசாசனம் எனும் வசிய்யத்தையும் கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் வாரிசுகள் சொத்துக்களைப் பிரிக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.
.....(இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

திருக்குர்ஆன் 4:11
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால்பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதைவிட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

திருக்குர்ஆன் 4.11.1
ஒருவர் மரணித்தால் அவரது கடனை அடைத்த பின்னர்தான் வாரிசுகள் சொத்தைப் பிரிக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கட்டளை இடுகிறான்.
ஆனால் நம்மில் அதிகமானவர்கள் இப்படி நடப்பதில்லை. பெற்றோரின் கடனைத் தீர்க்காவிட்டால் நம்முடைய பெற்றோரின் மறுமை வாழ்க்கை பாழாகிப் போய்விடும் என்பதுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
பெற்றோர்கள் சொத்துக்கள் எதையும் விட்டு வைக்காமல் கடனை மட்டும் வைத்து விட்டு மரணித்து விட்டால் அப்போது அவரது பிள்ளைகள் அந்தக் கடனைச் சுமக்க வேண்டும்; அந்தக் கடனை அடைப்பது அவர்களின் கடமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
1852 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள். கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்

நூல் : புகாரி 1852, 6697, 7315
பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
மரணம் நெருங்கிவிட்டதை உணரும்போது தீர்க்கப்படாத கடன் இருந்தால் வாரிசுகளை அழைத்து எப்படியாவது கடனை அடைக்குமாறு வசிய்யத் செய்ய வேண்டும்.
இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) தம் தோழர்களை உருவாக்கி இருந்தார்கள்.
1351 - حَدَّثَنَا مُسَدَّدٌ، أَخْبَرَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا حُسَيْنٌ المُعَلِّمُ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ، فَقَالَ: مَا أُرَانِي إِلَّا مَقْتُولًا فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا، «فَأَصْبَحْنَا، فَكَانَ أَوَّلَ قَتِيلٍ وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ، فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ»

உஹதுப் போர் நடக்கவிருந்தபோது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்தார்கள். நபித்தோழர்களில் முதலில் கொல்லப்படுவோரில் நானும் ஒருவனாக இருப்பேன் என்று நான் கருதுகிறேன். நபிகள் நாயகத்துக்கு அடுத்தபடியாக நான் விட்டுச் செல்லும் நபர்களில் நீயே எனக்கு மிகவும் விருப்பமானவன். எனக்குக் கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்!'' என்றார். மறுநாள் (போரில்) அவர்தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை அடக்கத்தலத்தில் விட்டுவைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் மண்ணறையிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல -அவரது காதைத் தவிர - உடம்பு அப்படியே இருந்தது.

நூல் : புகாரி 1351






No comments:

Post a Comment