இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
நபிகளாரின் எச்சரிக்கை!
ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்ன்னிலையில் புகழ்ந்து பேசினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்'' என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, "உங்களில் எவருக்காவது தன் சகோதரரைப் புகழ்ந்து ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் "இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),
நூல்: புகாரி 2662
ஒருவரை நாம் நல்லவர் என்று சொல்வதாக இருந்தால், என் பார்வையில் இவர் நல்லவர் என்று தெரிகிறார் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அல்லாஹ்விடத்தில் இவர் நல்லவர் என்ற கருத்தில் இவ்வாறு கூறக்கூடாது என்பதை இதிலிருந்து அறியலாம்.
அதே நேரத்தில் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக ஒருவரை நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படும்.
உதாரணமாக ஒரு தொழிலதிபர் தனது கடைக்கு ஒருவரை வேலைக்குச் சேர்ப்பதாக இருந்தால் அவர் நல்லவரா என்று கண்டுபிடிக்கும் அவசியம் ஏற்படுகிறது. தனது மகளை ஒருவனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கும் போது அவன் நல்லவனா கெட்டவனா என்று முடிவு செய்யும் அவசியம் ஏற்படுகிறது.
அவனைப் பற்றி அறிந்தவர்களிடம் விசாரித்து, அவனது வெளிப்படையான செயல்களின் அடிப்படையில் அவன் நல்லவன் என்று முடிவு செய்யலாம். இப்படி முடிவு செய்வதால் அவர் அல்லாஹ்விடம் நல்லவர் என்று நாம் கருத மாட்டோம். அவர் சொர்க்கவாசி என்றும் முடிவு செய்ய மாட்டோம். நாம் எந்தக் காரியத்தைப் பார்த்து அவரை நல்லவர் என்று நினைத்தோமோ அதுவே பொய்யாகிப் போனாலும் போகலாம் என்ற சந்தேகத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டுதான் நம்புகிறோம்.
மகான்கள் என்று முடிவு செய்து மதிக்கப்படும் பலர் இவ்வாறு கருதப்படுவதில்லை. அவர் அல்லாஹ்விடமும் நல்லடியார் என்றும், அவர் சொர்க்கவாசி என்றும், நம்மையும் சொர்க்கத்தில் சேர்க்கும் அளவுக்கு அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர் என்றும் நம்புகிறார்கள். இப்படி முடிவு செய்ய நமக்கு அதிகாரம் இல்லை.
No comments:
Post a Comment