Thursday, November 10, 2016

இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா? ( பகுதி 04 )


இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா? 
மார்க்கப்பற்றுள்ளவளை மணந்து கொள்ளச் சொன்னது ஆதாரமாகுமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு மணமகளைத் தேர்வு செய்வதைப் பற்றி  கூறும்போது,
"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளது குடும்பத்திற்காக, 3. அவளது அழகிற்காக, 4. அவளது மார்க்கத்திற்காக. மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5090
இந்த நான்கு விஷயங்களில் முதல் மூன்றை நாம் தீர்மானித்து விடலாம். நான்காவதாகக் கூறப்பட்ட மார்க்கப்பற்றை நாம் தீர்மானிக்க முடியுமா? முடியாது.
மார்க்கப் பற்றுள்ள பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். யார் மார்க்கப்பற்றுள்ளவர் என்று நாமே தீர்மானிக்க முடியும் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் ஒரு பெண்ணயோ, ஆணையோ மார்க்கப் பற்றுள்ளவர் என்று நாம் கூறினால் அதன் பொருள் என்ன? இவர் கண்டிப்பாக அல்லாஹ்வின் நேசர் என்ற பொருளிலோ, இவர் மறுமையில் சொர்க்கத்தை அடைவார் என்ற பொருளிலோ இப்படி யாரும் கூறுவதில்லை.
வெளிப்படையான செயல்களைப் பார்க்கும் போது நமக்கு அந்தப் பெண் நல்லவளாகத் தெரிகிறாள். ஆனால் அவள் அல்லாஹ்விடத்தில் பெரிய மார்க்கப்பற்றுள்ளவளா என்று எனக்குத் தெரியாது என்ற பொருளில் தான் கூறுகிறோம்.
ஒரு மாப்பிள்ளையை நல்லவன் என்று முடிவு செய்தால் அவன் நல்லவன் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் அவன் அல்லாஹ்விடத்தில் மார்க்கப்பற்றுள்ளவனாக இருக்கிறானா என்று எனக்குத் தெரியாது என்ற பொருளில் தான் முடிவு செய்கிறோம்.
நம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் இப்படி முடிவு செய்யும் அதிகாரம் நமக்கு தரப்பட்டுள்ளது.
மூமின்களைச் சோதித்து அறிய முடியுமா?
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.
திருக்குர்ஆன் 60:10
மூமினான - நம்பிக்கை கொண்ட - பெண்களைச் சோதித்து அறியமுடியும் என்று இவ்வசனம் கூறுவதால் நாம் ஒருவரை மகான் என்று முடிவு செய்யலாம் என்று கருதக் கூடாது.
வெளிப்படையான செயல்களையும், பேச்சுக்களையும் வைத்து நம்மளவில் முடிவு செய்வது பற்றியே இவ்வசனம் கூறுகிறது. மூமின்கள் என்று நாம் முடிவு செய்ததால் அல்லாஹ்விடமும் மூமின்கள் பட்டியலில் இருப்பார்கள் என்ற கருத்தை இது தராது. சொர்க்கத்தை அடைவார்கள் என்ற கருத்தையும் இது தராது.
மூமின்களா என்று சோதித்து அறியுங்கள் என்று மட்டும் அல்லாஹ் கூறாமல் ”அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன்” என்றும் சேர்த்துக் கூறுகிறான்.
அந்தப் பெண்கள் நம்பிக்கையுள்ளவர்களா என்று உங்கள் சக்திக்கு உட்பட்டு முடிவு செய்தாலும் அவர்கள் உண்மையான நம்பிக்கை உள்ளவர்களா என்பது எனக்குத் தான் தெரியும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
வெளிப்படையான செயல்களையும், மற்றும் அடையாளங்களையும் வைத்து முஸ்லிம்கள் என்று தெரிய வந்தால் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால்  அவர்களுடைய உள்ளத்தில் ஈமான்  இருக்கிறதா என்பதை அல்லாஹ் தான் அறிவான் என்று கூறி இதன் சரியான பொருளை அல்லாஹ் விளக்கிவிட்டான்.

No comments:

Post a Comment