Thursday, November 10, 2016

இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா? ( பகுதி 13 )


இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
சில நபித்தோழர்கள் பற்றி நபிகளின் கணிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நீங்கள் செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின்றோம்'' (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்'' என்று (அவர்களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, "தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது, நல்லடியார் (ஈஸா நபி) கூறியதைப் போல், "நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தால் நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்'' என்னும் (5:117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன்.
நூல்: புகாரி 3349
மேலும் இந்தச் செய்தி புகாரியில் 3447, 4740 ஆகிய இலக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல் "நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும் (புகாரி 4740) என்று இடம்பெற்றுள்ளது.
மற்றொரு அறிவிப்பில், "அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள் தாம்'' என்று நபியவர்கள் கூறியதற்கு, "உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். உடனே நான், "எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்துவானாக!'' என்று சொல்வேன் (புகாரி 7051) என்று இடம்பெற்றுள்ளது.
மேலே சொன்ன மூன்று ஹதீஸ்களிலும் மார்க்கத்தை விட்டுத் தடம்புரண்டு சென்றவர்களையெல்லாம் நல்லடியார்கள் என்று நினைத்து, அதே நிலையில் நபியவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். நபியவர்கள் யாரை நல்லவர்கள் என்று நினைத்தார்களோ அவர்களைப் பற்றிய தமது கணிப்பை மறுமையில் வெளிப்படுத்தும் போது அது தவறான கணிப்பு என்று அவர்களுக்குத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment