இஹ்ராம் பற்றிய விளக்கம்
"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்.
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க ஹஜ்ஜன்'' என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று கூற வேண்டும்.
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும். இதைத் தொடர்ந்து தல்பியா எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்'' என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2194, 2195
தல்பியா கூறுதல்
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
இவ்வாறு மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும். ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.
தவாஃபுல் குதூம்
"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
மகாமு இப்ராஹீமில் தொழுதல்
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
நூல் : முஸ்லிம் 2137
ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா, மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்'' என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும், மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்.
முடியைக் கத்தரித்தல்
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல், பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது.
இப்போது உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
No comments:
Post a Comment