ஜோசியம் பார்த்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் குறிகாரன் அல்லது வருங்காலத்தை கணித்துச் சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதினால் அவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்துவிட்டான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : அஹ்மத் (9171)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பாளர் : ஸஃபிய்யா
நூல் : முஸ்லிம் (4137)
பரவலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் பால்கிதாப் பார்த்தல் என்ற ஒரு நடைமுறை காணப்படுகிறது. இதுவும் ஜோதிடத்தில் சேர்ந்ததுதான். எனவே, பால்கிதாப் பார்ப்பதும் இணைவைப்புக் காரியமேயாகும்.
நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தொற்றுநோய் என்பதும் கிடையாது, சகுனம் என்பதும் இல்லை. ஆந்தை சகுனமும் கிடையாது. பீடை மாதமும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரீ (5757)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சகுனம் பார்ப்பது இணைகற்பித்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது(ரலி)
நூல் : அபூதாவூத் (3411)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவன் சகுனம் பார்த்து தனது காரியத்தை மாற்றுகிறானோ அவன் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி)
நூல் : அஹ்மத் (6748)
இன்றைக்கு அதிகமான முஸ்லிம் மக்களின் திருமணம், பயணம், மேலும் பல காரியங்களுக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்தே நடக்கின்றனர்.
அதே போன்று விதவைப் பெண், பூனை குறுக்கே வருவதும் கெட்ட சகுனம் என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இது போன்ற நம்பிக்கைகள் அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்கள் ஆகும்
சூனியம் செய்தல்
அல்லாஹ்வின் விருப்பம் இன்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது. (அல்குர்ஆன் 2:102)
சூனியம் என்ற வித்தை மூலம் பார தூரமானக் காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர்.
இருப்பதை இல்லாமல் ஆக்கவோ; இல்லாததை உருவாக்கவோ; ஒன்றை வேறொன்றாக மாற்றவோ; எந்த வித்தையும் கிடையாது.
தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அவ்வளவு தான்! இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்து பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.
قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ(116) سورة الأعراف
""நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸô) கூறினார். அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)
இவ்வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
قَالَ بَلْ أَلْقُوا فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى(66) سورة طة
""இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது (அல்குர்ஆன் 20:66)
இவ்வசனத்தில் பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை.
மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.
இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று நபர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள். 1. மது அருந்துபவன் 2. உறவுகளைத் துண்டிப்பவன் 3. சூனியத்தை உண்மை என்று கருதுபவன்.
நூல் : அஹ்மத் (18748)
அழித்துவிடும் ஏழு பாவங்களில் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தையும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நூல் : புகாரீ (2767)
அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்தல்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)
நூல் : புகாரீ (2679)
முகஸ்துதி (பிறருக்கு காட்டுவதற்காக செய்தல்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் உங்களிடம் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைத்தலைத்தான் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபியவர்கள் முகஸ்துதி என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (22528)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிறருக்கு காட்டுவதற்காக தொழுதவர் இணைகற்பித்து விட்டார், பிறருக்குக் காட்டுவதற்காக நோன்பு நோற்றவர் இணைகற்பித்து விட்டார். பிறருக்குக் காட்டுவதற்காக தர்மம் செய்தவர் இணை கற்பித்து விட்டார்.
நூல் : அஹ்மத் (16517)
காலத்தைத் திட்டுதல்
அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுவதின் (மூலம்) எனக்குத் துன்பம் தருகிறான். நான்தான் காலமாக இருக்கிறேன். என்னுடைய கையில்தான் அதிகாரம் உள்ளது. நான்தான் இரவையும் பகலையும் புரட்டுகிறேன்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரீ (4826)
ஷஃபாஅத் (மறுமையில் பரிந்துரை)
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ(18) سورة يونس
அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ""அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். ""வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ(3) سورة الزمر
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ""அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)
மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.
1. அறவே பரிந்துரை கிடையாது
2. நல்லடியார்கள், நபிமார்கள் # தாம் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்
3. நிபந்தனையுடன் கூடிய பரிந்துரை உண்டு
இம்மூன்று கருத்துக்களில் முதலிரண்டு கருத்துக்களும் குர்ஆனைப் பற்றிப் போதிய அறிவு இல்லாதவர்களின் கருத்தாகும்.
அறவே பரிந்துரை இல்லை என்ற கருத்தில் உள்ள வசனங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பரிந்துரையை அடியோடு மறுப்பவர்கள், பரிந்துரை பற்றிய அனைத்து வசனங்களையும் பார்ப்பதில்லை. பரிந்துரை பற்றிக் கூறும் சில வசனங்களை ஆழமான பார்வையில்லாமல் பார்ப்பதால் இரண்டாம் கருத்துக்கு சிலர் வந்துள்ளனர். இரண்டும் தவறாகும்.
وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ(48) سورة البقرة
ஒருவன், இன்னொருவனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது. எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 2:48)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّـا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمْ الظَّالِمُونَ(254) سورة البقرة
நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன 2:254)
وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَنْ يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُمْ مِنْ دُونِهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ لَعَلَّهُمْ يَتَّقُونَ(51) سورة الأنعام
""தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ இல்லை'' என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர். (அல்குர்ஆன் 6:51)
இதே கருத்தில் அமைந்துள்ள (திருக்குர்ஆன் 2:123, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48,) ஆகிய இவ்வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ... (255) سورة البقرة
அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்?
(அல்குர்ஆன் 2:255)
مَا مِنْ شَفِيعٍ إِلَّا مِنْ بَعْدِ إِذْنِهِ ... (3) سورة يونس
அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை
(அல்குர்ஆன் 10:3)
ஆகிய வசனங்களில் இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை அறியலாம். இறைவன் இதற்கு அனுமதியளிக்க மாட்டான் என்றால் இவ்வாறு கூற மாட்டான்.
وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ(28) سورة الأنبياء
அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள் (அல்குர்ஆன் 21:28)
لَا يَمْلِكُونَ الشَّفَاعَةَ إِلَّا مَنْ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَانِ عَهْدًا(87) سورة مريم
ரஹ்மானிடம் உடன்படிக்கை எடுத்தவர் தவிர மற்றவர்கள் பரிந்துரைக்கு உரிமையாளர் அல்லர் (அல்குர்ஆன் 19:87)
يَوْمَئِذٍ لَا تَنفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَانُ وَرَضِيَ لَهُ قَوْلًا(109) سورة طه
அவன் யாருக்கு அனுமதியளிக்கின்றானோ அவருக்கே தவிர மற்றவர் களுக்குப் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 20:109)
وَلَا تَنفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ ...(23) سورة سبأ
அவன் யாருக்கு அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 34:23)
وَلَا يَمْلِكُ الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِهِ الشَّفَاعَةَ إِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُونَ(86) سورة الزخرف
அவனன்றி அவர்கள் பிரார்த்திப்போர் பரிந்துரைக்கு உரிமையாளர்களாக மாட்டார்கள். அறிந்து, உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர. (அல்குர்ஆன் 43:86)
لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى(26) سورة النجم
அல்லாஹ் தான் நாடியவருக்கு அனுமதியளித்த பின்பே தவிர அவர்களுக்குப் பரிந்துரை பயன் தராது (அல்குர்ஆன் 53:26)
சிலருக்குப் பரிந்துரை செய்ய அனுமதியளிக்கப்படும் என்பதையும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்பதையும் இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
குர்ஆனைப் பற்றிய போதிய அறிவு இல்லாத ஒரு சிறு கூட்டத்தினர் மறுமையில் பரிந்துரை இல்லை எனக் கூறுகின்றனர். அது தவறு என்பதற்கு இவ்வசனங்கள் போதிய சான்றாகும்.
எவரது பரிந்துரையும் இன்றி நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.
"இறைவா! நபிகள் நாயகத்தின் பரிந்துரையைத் தா!' என்று கேட்பது தவறாகும்.
என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.
மறுமையில் அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே ""மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்'' என்று இங்கே வாழும் போது கேட்கக் கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.
மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணை வைப்போர் ஆனார்கள்.
யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.
அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும் போது ஒருவரை அழைத்து ""இவருக்குப் பரிந்துரை செய்'' என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அவனிடத்தில் மட்டுமே உள்ளது.
No comments:
Post a Comment