Sunday, November 13, 2016

செல்வம் நல்லோர் என்பதற்கான அடையாளம் அல்ல


செல்வம் நல்லோர் என்பதற்கான அடையாளம் அல்ல
நான் நல்லவனாகத்தானே வாழ்கிறேன். எனக்கு ஏன் இந்தப் பணக்கஷ்டம் என்று நாம் எண்ணும்போது நாம் தடம் புரள வேண்டிய நிலை ஏற்படும்.
செல்வம் கொடுக்கப்பட்ட அனைவரும் நல்லவர்கள் அல்லர். செல்வம் வழங்கப்படாதவர்கள் அனைவரும் கெட்டவர்களும் அல்லர்.
கெட்டவர்கள் அனைவரும் செல்வந்தர்களாக இருந்தால் நாமும் அப்படி நடந்தால் செல்வம் வந்து குவியுமே என்று கருதலாம். ஆனால் கெட்டவர்களிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
நல்ல வழியில் மட்டும் பொருள் ஈட்டினால் நாம் செல்வந்தர்களாக ஆக முடியாது என்றும் நாம் கருத முடியாது. மிக நல்லவர்களாக வாழ்ந்தவர்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிலும் செல்வந்தர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதைப் புரிந்து கொள்வது பொருளீட்டுவதற்காக எப்படியும் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை மாற்றி அமைக்கும்.
கெட்டவர்களில் பலர் பெரும் செல்வந்தர்களாக இருந்ததையும் நல்லவர்களில் பலர் கஷ்டப்பட்டதையும் நல்லவர்களில் பலர் செல்வந்தர்களாக இருந்ததையும் இதற்காகவே அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.
கெட்டவர்களுக்கும் செழிப்பான வாழ்க்கை
மூஸா நபி அவர்களின் சமுதாயத்தில் காரூன் என்ற கெட்டவனுக்குச் செல்வத்தைக் கொடுத்ததை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும்.
திருக்குர்ஆன் 28:76
தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
திருக்குர்ஆன் 28:79
பொக்கிஷங்களைப் பூட்டிவைக்கும் அறைகளின் சாவிகளைச் சுமப்பதற்கு பெருங்கூட்டம் தேவை என்பதும் அதுகூட அவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதும் காரூனின் செல்வம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நம் கண் முன்னால் நிறுத்துகிறது.
மூஸா நபி சமுதாயத்தில் வாழ்ந்த கொடுங்கோலனாகிய ஃபிர்அவ்னுக்கு அளப்பரிய செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று கீழ்க்காணும் வசனம் கூறுகிறது.
"எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
திருக்குர்ஆன் 10:88
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இறைவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்த குரைஷ் குலத்தாருக்குச் செல்வத்தை வாரி வழங்கியிருந்ததை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் நினைவூட்டுகிறான்.
குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின்போது அவர்களுக்கு அவன் உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.
திருக்குர்ஆன் 106வது அத்தியாயம்
சிலருக்கு செல்வத்தை அதிக அளவில் வழங்குவது அவர்களை ஆட்டம் போட வைத்து கடும் தண்டனை அளிப்பதற்காகத்தான் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
திருக்குர்ஆன் 9:55
அவர்களுக்கு நாம் செல்வத்தையும், பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து "நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம்'' என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணர மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23: 55.56

No comments:

Post a Comment