Sunday, November 13, 2016

வறுமையும் செல்வமும் திறமையால் மட்டும் கிடைப்பதல்ல



வறுமையும் செல்வமும் திறமையால் மட்டும் கிடைப்பதல்ல
ஒருவருக்கு வழங்கப்படும் செல்வம் அவரது திறமையினாலோ, அறிவினாலோ, கடின உழைப்பினாலோ மட்டும் கிடைப்பதல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்வது செல்வத்தின் மீது வெறிபிடித்து அலைவதைக் கட்டுப்படுத்தும்.
திறமை மிக்கவர்களில் பெரும் செல்வந்தர்கள் இருப்பது போல் திறமையற்ற பலரும் செல்வந்தர்களாக இருப்பதை நாம் கண்முன்னே காண்கிறோம்.
கடினமாக உழைப்பவர்களில் செல்வந்தர்கள் இருப்பது போல் சராசரியாக உழைப்பவர்களிலும் செல்வந்தர்கள் உள்ளனர். அறவே உழைப்பு இல்லாத செல்வந்தர்களையும் நாம் காண்கிறோம்.
அறிவும், திறமையும் உள்ளவர்களில் அதிகமானோர் பரம ஏழைகளாக இருப்பதையும், அறிவும் திறமையும் இல்லாத பலர் செல்வந்தர்களாக இருப்பதையும் காண்கிறோம்.
அதுபோல் கடின உழைப்பாளிகளில் சிலர் செல்வந்தர்களாக இருப்பது போல் சோம்பேறிகளில் சிலரும் செல்வந்தர்களாக உள்ளனர்.
இந்த உண்மையை இஸ்லாம் நமக்கு நினைவுபடுத்தி நம்மை நெறிப்படுத்துகிறது.
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
திருக்குர்ஆன் 13:26
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 17:30
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 30:37
செல்வத்தைத் திரட்டுவதற்காக நாம் நெறிமுறைகளைப் பேணாமல் நடந்தாலும் நமக்கு அல்லாஹ் எதை எழுதி வைத்துள்ளானோ அதுதான் கிடைக்கும். நெறிமுறைகளைப் பேணி நாம் நடந்தாலும் நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விடும்.
நமக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவன் விதித்தது எப்படியும் கிடைத்து விடும் எனும்போது நாம் ஏன் நெறிமுறைகளை மீறி பாவத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை மேற்கண்ட வசனங்கள் மூலம் அல்லாஹ் சொல்லித்தருகிறான்.

No comments:

Post a Comment