Sunday, November 13, 2016

வறுமையும், வசதிகளும் சோதனைதான்



வறுமையும், வசதிகளும் சோதனைதான்
ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் பயிற்சியாகும்.
பொருளாதாரத்தைத் திரட்டும்போதும், அதை அனுபவிக்கும்போதும் மனிதன் எல்லை மீறுவதற்குக் காரணம் பொருளாதாரமும், வறுமையும் நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் பரீட்சையாகும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்.
இதைப் புரிந்து கொள்ளும் ஒருவன் வறுமையின் போதும் செல்வச் செழிப்பின் போதும் தடம் புரளமாட்டான்.
வறுமை ஏற்படும்போது இறைவன் அநீதி இழைத்து விட்டான் என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். வறுமையைப் போக்கிட திருட்டு போன்ற தவறான வழிகளில் ஷைத்தான் நம்மை இழுத்துச் சென்று அதை நியாயமாக்கிக் காட்டுவான்.
வறுமை இந்த வகையில் சோதனையாக அமைந்து விடுகிறது.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 89 : 15, 16
6368 - حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ القَبْرِ، وَعَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ»
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இறைவா சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும் அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும் அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வறுமையின் சோதனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : புகாரி : 6368, 3375, 6376, 6377
செல்வத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிப்பது போல் செல்வத்தை எடுத்தும் அல்லாஹ் சோதிப்பான் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2: 214
மனிதனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே சிலருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்குகிறான். சோதித்துப் பார்ப்பதற்காகவே சிலரை வறுமையில் வாடவிடுகிறான் என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
கொடுத்தும் அல்லாஹ் சோதிக்கிறான்; கொடுக்காமல் எடுத்தும் அல்லாஹ் சோதிக்கிறான் என்று ஒரு முஸ்லிம் உறுதியாக நம்பும்போது பொருளாதாரத்தைத் திரட்டுவதிலும், செலவிடுவதிலும் செய்யும் பல தவறுகளில் இருந்து அவன் விலகிக் கொள்ள முடியும்.
நமக்கு வறுமை வரும்போது அதன் மூலம் அல்லாஹ் நம்மைச் சோதிக்கிறான் என்று நம்பினால் பொருள் திரட்டுவதற்காக நெறிமுறைகளை நாம் மீற மாட்டோம்.
நமக்குச் செல்வம் வழங்கப்பட்டால் அதுவும் நம்மைச் சோதிப்பதற்காகவே அல்லாஹ் வழங்குகிறான் என்று நாம் நம்பினால் செல்வம் வந்து விட்டது என்பதற்காக நாம் ஆட்டம் போட மாட்டோம்.

No comments:

Post a Comment