Wednesday, December 7, 2016

மவ்லிதும் மீலாதும் வாதமும் பதிலும்



மவ்லிதும் மீலாதும்

இஸ்லாம் கடுமையாகக் கண்டித்த ஷிர்க் என்ற மகா பாதகமான செயல்களை சர்வசாதரணமாகச் செய்யலாம் என்றும் அதற்கு நன்மையும் உண்டும் என்றும் அதற்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் உண்டு என்றும் சிலர் கூட்டங்கள் மேடை போட்டும் புத்தகமாகவும் சொல்லி வருகிறார்கள்.
அவர்களின் அபத்தமான ஆபத்தான வாதங்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்ட உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.
( எதிர் தரப்பு வாதங்கள் சிகப்பு  நிரத்தில் காட்டபட்டு உள்ளது )
நபி (ஸல்) அவார்கள் காலத்தில் மவ்லூத் ஓதப்பட்டது. பல நபித்தோழர்கள் மவ்லூத் ஓதியுள்ளார்கள். அதற்குரிய ஆதாரம் இதோ:
ஹைஸம் பின் அபீசினான் அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தமது பேச்சினிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர் என -அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு - கூறிவிட்டு, அவர் நபி (ஸல்) பற்றி இயற்றிய (பின்வரும்) பாடலை எடுத்துக் கூறினார்கள்:
"எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரம் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்; குருட்டுத் தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணைவைப்பாளர்கள் இரவில் படுக்கை விரிப்பில் அழுந்திக் கிடக்கும்போது அன்னார் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.'
நூல் : புகாரி (1155)
நமது பதில்
நபி (ஸல்) அவர்களையும் நாமும் பயான்களில் புகழ்ந்து கூறத்தான் செய்கிறோம். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் சொன்னதைப்போன்று நாமும் பிரச்சாரங்களில் கூறத்தான் செய்கிறோம். அவ்வாறு இருந்தும் நாம் மவ்லூத் ஓதுகிறோம் என்று யாரும் கூறுவதில்லை. காரணம் மவ்லூத் என்றால் என்ன என்பதை மக்கள் வேறு விதமாக விளங்கி வைத்துள்ளார்கள்.
ரபீவுல் அவ்வல் மாதத்தில் குறிப்பிட்ட புத்தகத்தை வைத்து சுற்றி தின்பண்டங்கள், பாதார்த்தங்கள் வைத்துப் பாடுவதும். அவ்வாறு பாடினால் நன்மை கிடைக்கும், செல்வம் பெருகும் என்பதே மவ்லூத் என்று மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக தேங்கை சர்புத்தீன் என்ற ஆலிம் எழுதிய சுந்தரத் தமிழல் சுப்ஹான மவ்லித் என்று நூலில் கூறப்பட்டக் கருத்தை பாருங்கள்.
மவ்லூது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லூதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
திருநபி (ஸல்) அவர்களின் மவ்லூது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால்அவர், ஈமானின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்
(ஆதாரம்:சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)
மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் பரக்கத்ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டுவிட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”.
(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :12)
எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள், ஷுஹதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன், அல்லாஹ் எழுப்புவான். மேலும் நயீம்எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)
எந்தவொரு வீட்டிலோ பள்ளிவாசலிலோ, மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன் கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்
(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)
மேற்சொன்ன நபிக்கையின் அடிப்படையில்தான் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் பாடினார்களா?
ரபீவுல் அவ்வல் மாதத்தில் ஓதினார்கள் என்று உள்ளதா? அல்லது திண்பண்டங்கள் வைத்து ஓதினார்கள் என்றுள்ளதா? இவ்வாறு ஓதினால் நன்மை கிடைக்கும் என்று கூறினார்களா?
நபி (ஸல்) அவர்கள் பற்றிய கருத்தை கவிதை நடையில் கூறினார்கள். அவ்வளவுதான் உள்ளது. இதை மவ்லித் என்று சொல்பவர்கள் மண்டையில் ஏதாவது இருக்கும் என்று கூறமுடியுமா?
மவ்லிதுகளில் உணவுகள் பரிமாறப்படுவது இனிப்புகள் வழங்கப்படுவது அனைத்தும் தான தர்மத்தின் கீழ் கட்டுப்பட்டதுதான். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ளதுதான். வண்ண வண்ண மலர்கள் வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாத்திற்கு மாற்றமான காரியம் அல்ல.
நமது பதில்
கோவில்களில் வழங்கப்படும் அன்னதானமும் தான தர்மத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதுதான். எனவே அது கூடும் என்று இவர்கள் கூறுவார்களா?
மவ்லித் சபையில் பாரிமாறப்படும் உணவுக்குத் தனிச் சிறப்புள்ளது. அதைச் சாப்பிட்டால் பரகத் கிடைக்கும் என்று நம்பப்படுவதும் சாதரண தர்மமும் ஒன்றாகுமா?
மார்க்கம் அனுமதி வழங்கிய காரியத்திற்கே வண்ண வண்ண மலர்கள், வண்ண விளக்குகள் போன்றவை பயன்படுத்தி வீண் விரயம் செய்ய அனுமதியில்லாதபோது மார்க்கம் அனுமதிக்காத நபிகளார் காட்டித்தராத ஒன்றுக்கு எப்படி வீண் விரயம் செய்யலாம்?
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மவ்லித் ஓதியுள்ளார்கள். நபிமார்களுக்கும் மவ்லித் ஓதியுள்ளார்கள். அதற்குரிய ஆதாரம் இதோ
நபித்தோழர்கள் நபிகளாரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அப்போது (நபிமார்களைப் பற்றி புகழ்ந்து) இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் உற்றத் தோழர், மூஸா (அலை) அவர்களை (கடல் பிளந்து) அல்லாஹ் காப்பாற்றினான். ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் ரூஹாகவும் அவனின் கட்டளையாகவும் உள்ளார்கள். இதைப்போன்று ஆதம் (அலை) அவர்களையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்று கூறியபோது (நபிகளார் வந்து) ஆம் நான் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவனாவேன் என்று கூறினார்கள்.
(திர்மிதீ 3549)
நமது பதில்

3549حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَلَسَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَهُ قَالَ فَخَرَجَ حَتَّى إِذَا دَنَا مِنْهُمْ سَمِعَهُمْ يَتَذَاكَرُونَ فَسَمِعَ حَدِيثَهُمْ فَقَالَ بَعْضُهُمْ عَجَبًا إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ اتَّخَذَ مِنْ خَلْقِهِ خَلِيلًا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا وَقَالَ آخَرُ مَاذَا بِأَعْجَبَ مِنْ كَلَامِ مُوسَى كَلَّمَهُ تَكْلِيمًا وَقَالَ آخَرُ فَعِيسَى كَلِمَةُ اللَّهِ وَرُوحُهُ وَقَالَ آخَرُ آدَمُ اصْطَفَاهُ اللَّهُ فَخَرَجَ عَلَيْهِمْ فَسَلَّمَ وَقَالَ قَدْ سَمِعْتُ كَلَامَكُمْ وَعَجَبَكُمْ إِنَّ إِبْرَاهِيمَ خَلِيلُ اللَّهِ وَهُوَ كَذَلِكَ وَمُوسَى نَجِيُّ اللَّهِ وَهُوَ كَذَلِكَ وَعِيسَى رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ وَهُوَ كَذَلِكَ وَآدَمُ اصْطَفَاهُ اللَّهُ وَهُوَ كَذَلِكَ أَلَا وَأَنَا حَبِيبُ اللَّهِ وَلَا فَخْرَ وَأَنَا حَامِلُ لِوَاءِ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَأَنَا أَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَأَنَا أَوَّلُ مَنْ يُحَرِّكُ حِلَقَ الْجَنَّةِ فَيَفْتَحُ اللَّهُ لِي فَيُدْخِلُنِيهَا وَمَعِي فُقَرَاءُ الْمُؤْمِنِينَ وَلَا فَخْرَ وَأَنَا أَكْرَمُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ وَلَا فَخْرَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ رواه الترمذي

இறைத்தூதர்களை அல்லாஹ் எப்படிப் புகழ்ந்துள்ளானோ அதே வார்த்தைகளைத்தான் நபித்தோழர்கள் கூறினார்கள். வரம்பு மீறி வார்த்தைகள் எதுவும் இல்லை. மேலும் இன்று நடப்பதைப் போன்று உணவுத் தட்டுக்களை வைத்துக் கொண்டும் வண்ண விளக்குகள், வண்ணக் காகிதங்கள் கொண்டு அலங்கரித்தும் பாடல்கள் பாடினார்களா? இது எப்படி மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாகும்?
மேலும் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. இந்தச் செய்தியில் இடம்பெறும் ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் பலவீனமான அறிவிப்பாளராவார்.
எல்லா நபிமார்களையும் அழைத்து நபிகளாருக்கு அல்லாஹ் மீலாது விழா கொண்டினான். ஆதாரம் இதோ
"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான். இதன் பிறகு புறக்கணிப்போரே குற்றம் புரிந்தவர்கள்.
(அல்குர்ஆன் 3:81,82)
நமது பதில்
இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றிக் கூறப்படுகிறது.
"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பதுதான் உடன்படிக்கை.
"உங்களிடம் ஒரு தூதர் வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.
"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும்போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பதுதான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இதில் எங்கு அல்லாஹ் மீலாது கொண்டினான் என்றுள்ளது?
அல்லாஹ்வின் மீதே துணிந்து பொய் சொல்லும்  நபர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடித்து போடுவது என்று இதைத்தான் சொல்கிறார்களா?     


No comments:

Post a Comment