Tuesday, January 24, 2017

ஈமானின் சுவை



57. ஈமானின் சுவை


عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ ‏"‏‏.‏

'எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.

(அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 என அனஸ்(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 16 ) முஸ்லிம் ( 89 ) திர்மிதீ ( 2552 ) இப்னு மாஜா ( 65 )

விளக்கம் :

இஸ்லாத்தை ஏற்பவர் அதன் அனைத்துச் சட்டங்களையும் கொள்கைகளையும் தெரிந்து அதில் இன்பமுற்றுச் செயல்பட வேண்டும். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதற்காக ஒருவர் இஸ்லாத்தில் இணையக் கூடாது அதன் முக்கியத்துவத்தையும் அதன் கொள்கை கோட்பாடுகளையும் அறிந்திருக்க வேண்டும்.

இஸ்லாத்தின் முழுமையான சட்டங்களை அறிந்திருக்காவிட்டாலும் அதன் முக்கியமான சில விஷயங்களையாவது அறிந்திருப்பது அவசியமாகும். 

அதில் மூன்று விஷயங்களை ஒருவர் அறிந்திருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றிருந்தால் அவர் ஈமானின் சுவையை அறிந்தவராகக் கருதப்படுவார்.
அவர் ஒருபோது இஸ்லாத்தை விட்டுப் போக மாட்டார்.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உலகில் உள்ள மற்ற எவரை விடவும் நேசத்திற்குரியவராக மனப்பூர்வமாக நாம் ஏற்க வேண்டும் எந்தப் பிரச்சனையிலும் அல்லாஹ் சொன்ன அவனது தூதர் சொன்ன காரியங்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும்.

யார் மீது அன்பு செலுத்தினாலும் அல்லாஹ்வுக்காக அன்பு செலுத்த வேண்டும் ஒருவரை வெறுத்தாலும் அது அல்லாஹ்வுக்காக இருக்க வேண்டும் . சுருக்கமாகச் சொன்னால் ஒருவரை விரும்புவதும் வெறுப்பதும் கொடுப்பதும் தடுப்பதும் என எதுவாயினும் இறை நேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

இஸ்லாத்திற்கு வந்த பின்னர் மீண்டும் இணை வைப்புக் கொள்கைக்குச் செல்வதை நெருப்பில் போட்டால் எப்படித் துடிப்போமோ அது போன்று  வெறுப்பைக் காட்ட வேண்டும்.


ஈட்டி முனையில் நிறுத்திய போதும் ஈமான் இழக்க மாட்டோம் என்று ஈமானில் உறுதியாக இருக்கும் எவரும் இஸ்லாத்தை விட்டுச் சற்றும் விலக மாட்டார் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment