Sunday, April 30, 2017

தவணை வியாபாரம் & ஏலச்சீட்டுகள் & ஒத்திக்கு விடுதல்


தவணை வியாபாரம்
அதைப் போல தவணை வியாபாரம் பற்றியும் நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது.
ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது.
அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாக கொடுக்கலாம். அதுபோல் தனக்கு வேண்டியவர்களுக்கு லாபமே வைக்காமல் அசலுக்குக்கூட விற்கலாம். இதில் எந்தக் குற்றமும் இல்லை.
ஆயிரம் ரூபாய்க்கு நாம் விற்கும் பொருளை நம்முடைய உறவினருக்கு 900 ரூபாய்க்குக் கொடுப்போம். அல்லது இலவசமாகக் கூட கொடுப்போம். இது தடுக்கப்பட்ட இரட்டை விலையில் சேராது. ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்ததால் எனக்கும் இலவசமாகக் கொடு என்று மற்றவர்கள் கேட்க முடியாது.
கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று இரட்டை விலை நிர்ணயிக்கும் போதுதான் அது வட்டியாக ஆகின்றது. அவ்வாறு இல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒரு பொருளுக்கு இரு விலைகள் நிர்ணயிப்பது குற்றமாகாது.
ஒரு பொருள் வாங்கினால் இன்ன விலை; பத்து பொருள் வாங்கினால் இன்ன விலை என்று சொல்லும்போது இங்கும் இரட்டை விலைதான் வருகிறது. ஆனால் இது குற்றமில்லை. ஏனெனில் கடனுக்காக நாம் விலையை அதிகரிக்கவில்லை.
ஆனால் ரொக்கமாக விற்கும்போது ஆயிரம் ரூபாய் எனவும் கடனாக விற்கும்போது 1200 ரூபாய் எனவும் விற்பனை செய்தால் கூடுதலான 200 ரூபாய் பொருளுக்கான விலை அல்ல. வியாபாரியின் பணம் வாடிக்கையாளரிடம் சில நாட்கள் இருக்கிறது என்பதற்காகத்தான் 200 ரூபாய் அதிகமாக்கப்படுகிறது.
ஒருவரின் பணம் இன்னொருவரிடம் இருப்பதற்காக பெறக்கூடிய ஆதாயம் தான் வட்டியாகும். எனவே கடனுக்கு ஒரு விலை ரொக்கத்துக்கு ஒரு விலை என்று விற்பதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.
ஒத்திக்கு விடுதல் கூடாது
சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது பெரும் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். வீட்டை ஒப்புக் கொண்டவர் பெரிய தொகையைக் கொடுத்துள்ளதால் வாடகை ஏதும் கொடுக்காமல் வீட்டில் குடியிருப்பார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னர் முன்பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை ஒப்படைப்பார்.
இது ஒத்தி எனவும் சில பகுதிகளில் போகியம் எனவும் கூறப்படுகின்றது.
கொடுத்த பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை அடைமானமாகப் பெற்றுக் கொள்வது குற்றமில்லை. ஆனால் அதற்குரிய வாடகையை வீட்டின் உரிமையாளருக்குக் கொடுக்காமல் கொடுத்த பணத்துக்காக ஆதாயம் அடைவது வட்டியாகும் என்பதால் இதை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கடனாக நாம் கொடுக்கும் பணத்துக்கு உத்தரவாதம் தேவை என்றால் வீட்டின் பத்திரத்தை அடைமானமாகப் பெற்று எழுதிக் கொண்டு உரிமையாளரை வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கலாம். அல்லது வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டுக் கொள்ள உரிமையாளரை அனுமதிக்கலாம். ஒரு முஸ்லிம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். ஒருவனுக்கு ஏற்பட்ட பண நெருக்கடியைப் பயன்படுத்தி வட்டியை வேறு பெயரில் வாங்கக் கூடாது.

ஏலச்சீட்டு
ஏலச் சீட்டு என்ற பெயரில் நடக்கும் அநியாயத்துக்கு நம் சமுதாயத்திலும் சிலர் பலியாகி உள்ளனர். அது தவறு என்ற ஞானம்கூட அவர்களுக்கு இல்லை.
ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு என்று வைத்துக் கொள்வோம். பத்து நபர்கள் சேர்ந்து மாதம் பத்தாயிரம் ரூபாய் கட்டுவார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் சேரும். பத்து நபர்களில் ஒருவருக்கு அந்த தொகையைக் கொடுப்பார்கள். குறிப்பிட்ட மாதத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்று குலுக்கல் மூலம் நிர்ணயித்து கொடுத்தால் இதில் குற்றம் சொல்ல முடியாது. அல்லது பத்துப் பேரில் யாருக்கு முக்கிய தேவை உள்ளது என்று ஆய்வு செய்து முடிவு செய்தால் அதையும் குற்றம் சொல்ல முடியாது.
ஒவ்வொரு மாதத்திலும் யாருக்குக் கொடுப்பது என்பதை ஏலத்தின் மூலம் முடிவு செய்கிறார்கள். அதாவது ஒரு லட்ச ரூபாய்க்குப் பதிலாக யார் குறைந்த தொகையை வாங்கிக்கொள்ள முன்வருகிறார்களோ அவர்களுக்கு அந்தக் குறைந்த தொகையைக் கொடுப்பார்கள்.
ஒரு லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 90 ஆயிரம் தந்தால் போதும் என்று ஒருவரும் 80 ஆயிரம் தந்தால் போதும் என்று வேறு ஒருவரும் போட்டியிட்டால் 80 ஆயிரத்துக்கு ஏலம் கேட்டவருக்கு 80 ஆயிரத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவர் மீதி ஒன்பது மாதங்களுக்கு தலா பத்தாயிரம் கட்டி வர வேண்டும். இவரிடம் வசூலிக்கப்படுவது ஒரு லட்சம். ஆனால் இவருக்குக் கொடுப்பது 80 ஆயிரம். இதை ஏலச் சீட்டு நடத்துபவர் எடுத்துக் கொள்வார். அல்லது இதில் பாதியை அவர் எடுத்துக் கொண்டு மீதியை ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்.
இது அப்பட்டமான மோசடியாகும். ஒருவனின் நெருக்கடியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுரண்டலாகும். அவனிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயைச் சுருட்டுவதற்கு மார்க்கம் அனுமதித்த எந்தக் காரணமும் இல்லை.
முன் கூட்டியே பணம் கொடுப்பதால் 80 ஆயிரத்துக்கு ஒரு லட்சம் என்று வாங்குவதும் வட்டியில்தான் சேரும். 
பிராவிடண்ட் ஃபண்ட்
அரசு அலுவலகங்களிலும் பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நமது நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பிடிக்கப்பட்ட தொகை ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதில் பிரச்சனை இல்லை.
ஆனால் இவ்வாறு பிடிக்கப்படும் தொகைக்கு அவ்வப்போது வட்டியைக் கணக்கிட்டு ஊழியர்கள் கணக்கில் சேர்ப்பார்கள்.. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட தொகை பத்து லட்சம் என்றால் அதற்கான வட்டியும் சேர்த்து வழங்கப்படும். இதில்தான் பிரச்சனை உள்ளது.
வட்டி மார்க்கத்தில் தடுக்கப்பட்டு இருந்தாலும் நம் விருப்பப்படி முடிவு செய்யும் காரியங்களில்தான் நாம் முடிவு எடுக்க முடியும். என்னுடைய ஊதியத்தில் பிராவிடண்ட் ஃபண்டுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்று கூறும் உரிமை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. ஊழியர்கள் மீது இது கட்டாயமாகத் திணிக்கப்படுவதால் இது நிர்பந்தம் என்ற வகையில் சேரும். இதற்காக ஊழியர் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்.
ஆனால் ஓய்வு பெறும்போது வட்டி இல்லாமல் ஊழியரிடமிருந்து பிடித்த பணத்தை மட்டும் பெற்றுக் கொள்ள வழி இருந்தால் அந்த வழியைத் தேர்வு செய்து வட்டியில் இருந்து விடுபட வேண்டும்.
அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளைக் கையாண்டு வாட்டியை வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். வட்டியுடன் சேர்த்துத்தான் அந்தப்பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நம்முடைய ஊதியத்தில் இருந்து சேமிக்கப்பட்ட பணமே கிடைக்காது என்ற நிலை இருந்தால் அப்போது நிர்பந்தம் என்ற நிலைக்கு ஒருவர் தள்ளப்படுகிறார். அவர் மீது திணிக்கப்பட்ட வட்டியை வாங்கிக் கொண்டால் அதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.
சக்திக்கு மீறி யாரையும் அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.
திருக்குர்ஆன் 2:286

No comments:

Post a Comment