Wednesday, May 3, 2017

கடமையான தொழுகைக்கு பிறகு கைகளை உயர்த்தி துஆ செய்யலாமா ?





ஃபத்வா எண் : 04


கேள்வி : 25 

கடமையான தொழுகைக்குப் பின்பு கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் நம்மை துஆ கேட்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.  தனது அடியான் கையை உயர்த்தி கேட்கும் போது அவனை வெறுங்கையுடன் திரும்ப அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான் என்று ஹதீஸ் உள்ளது. ஆனால் சவூதியில் கடமையான தொழுகைக்குப் பின் துஆ கேட்கும் போது கையை உயர்த்தக் கூடாது, நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, மற்ற நேரங்களில் கையை உயர்த்தலாம் என்று கூறுகின்றார்களே? இது சரியா?

பதில்

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்தி பிரார்த்தித்துள்ளார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ يَرْمِي الْجَمْرَةَ الدُّنْيَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عَلَى إِثْرِ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَتَقَدَّمُ حَتَّى يُسْهِلَ فَيَقُومَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً، وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، ثُمَّ يَرْمِي الْوُسْطَى، ثُمَّ يَأْخُذُ ذَاتَ الشِّمَالِ فَيَسْتَهِلُ وَيَقُومُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ فَيَقُومُ طَوِيلاً وَيَدْعُو وَيَرْفَعُ يَدَيْهِ، وَيَقُومُ طَوِيلاً، ثُمَّ يَرْمِي جَمْرَةَ ذَاتِ الْعَقَبَةِ مِنْ بَطْنِ الْوَادِي، وَلاَ يَقِفُ عِنْدَهَا ثُمَّ يَنْصَرِفُ فَيَقُولُ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ‏.‏

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். பிறகு தமது கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆச் செய்வார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குச் சென்று கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று கைகளை உயர்த்தி துஆச் செய்வார்கள். பிறகு பத்னுல் வாதியிலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். "இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கின்றேன்'' என்று கூறுவார்கள்.

நூல்: புகாரி 1751, 1753

عَنْ أَبِي مُوسَى، قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَاءٍ فَتَوَضَّأَ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ ‏"‏‏.‏ وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ فَقَالَ ‏"‏ اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ الْقِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ ‏"‏‏.

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி உளூச் செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, "இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கி விடுவாயாக!'' என்று பிராத்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்களின் வெண்மையை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 6383

عَنْ أَنَسٍ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْفَعُ يَدَيْهِ فِي الدُّعَاءِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ

நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்யும் போது அவர்களது அக்குள் வெண்மை தெரியும் வரை தமது இரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1490

…..ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ ‏"‏ ‏.‏

......தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக்கூடிய ஒரு மனிதன், "என் இறைவா! என் இறைவா!'' என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப் பட்டிருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1015

நபி (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்திப் பிரார்த்திருப்பதையும், அவ்வாறு பிரார்த்திப்பதை அங்கீகரித்திருப் பதையும் இந்த ஹதீஸ்கள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் கைகளை உயர்த்திப் பிரார்த்திக்கலாம் என்பதை இதன் மூலம் அறிய முடியும்.

பொதுவாக நபி (ஸல்) அவர்கள் செய்த, அங்கீகரித்த ஒரு விஷயத்தை ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் செய்யக் கூடாது என்றால் அதற்கு நேரடியான தடை இருக்க வேண்டும்.

உதாரணமாக உபரியான நோன்புகள் எந்த நாளிலும் நோற்க மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் பெருநாட்களிலும், வெள்ளிக்கிழமைக்கென்று பிரத்தியேகமாகவும், நோன்பு நோற்கத் தடை உள்ளது. எனவே இந்த நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது என்று கூறலாம். அதே சமயம், இவ்வாறு குறிப்பிட்ட தடை எதையும் காட்டாமல், "நபி (ஸல்) அவர்கள் புதன் கிழமை நோன்பு நோற்றதாக ஹதீஸ் எதுவும் இல்லை, எனவே புதன் கிழமை நோன்பு நோற்கக் கூடாது'' என்று யாரும் கூற மாட்டார்கள்.


இது போன்று தான் கைகளை உயர்த்தி துஆச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் முன் மாதிரி இருக்கும் போது, தொழுகைக்குப் பின் அவ்வாறு செய்யக் கூடாது என்றால் அதற்கு நேரடியான தடையைக் காட்ட வேண்டும். நாம் தேடிப் பார்த்த வரையில் ஹதீஸ்களில் அவ்வாறு தடை எதுவும் இல்லை. எனவே தொழுகைக்குப் பின் தாராளமாக கைகளை உயர்த்திப் பிரார்த்திக்கலாம்.

No comments:

Post a Comment