Saturday, July 22, 2017

அத்தியாயம் : 3 கல்வியின் சிறப்பு ஹதீஸ்கள் 97 முதல் 115 வரை


                                                    அத்தியாயம் : 3 ( பகுதி 04 )

                                                                    كتاب العلم  

                                                              கல்வியின் சிறப்பு





(31)باب تَعْلِيمِ الرَّجُلِ أَمَتَهُ وَأَهْلَهُ
பாடம் : 31

ஒருவர் அடிமைப் பெண்ணுக்கும் தம் குடும்பத்தாருக்கும் கல்வி கற்றுக்கொடுத்தல்.

أَخْبَرَنَا مُحَمَّدٌ ـ هُوَ ابْنُ سَلاَمٍ ـ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا صَالِحُ بْنُ حَيَّانَ، قَالَ قَالَ عَامِرٌ الشَّعْبِيُّ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ، وَآمَنَ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ ‏{‏يَطَؤُهَا‏}‏ فَأَدَّبَهَا، فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ ‏"‏‏.‏

ثُمَّ قَالَ عَامِرٌ أَعْطَيْنَاكَهَا بِغَيْرِ شَىْءٍ، قَدْ كَانَ يُرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ‏.‏

97. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.

1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத்தூதரையும் (இறுதித்தூதர்) முஹம்மதையும் நம்பிக்கை கொண்டார்.

2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.

3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.)

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சாலிஹ் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்நபிமொழியை அறிவித்த) பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்.டுவந்த குராசான்வாசி ஒருவரிடம்), (சிரமம்) ஏதுமில்லாமலேயே இந்தக் கல்வியை நான் உங்களுக்கு வழங்கியிருக்கிறேன். இதைவிடச் சிறியப் பிரச்சினைகளுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டதுண்டு.

(32)باب عِظَةِ الإِمَامِ النِّسَاءَ وَتَعْلِيمِهِنَّ
பாடம் : 32

தலைவர் (இமாம்) பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும் அவர்களுக்கு (கல்வி) போதிப்பதும்.

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، قَالَ سَمِعْتُ عَطَاءً، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ أَوْ قَالَ عَطَاءٌ أَشْهَدُ عَلَى ابْنِ عَبَّاسٍ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ وَمَعَهُ بِلاَلٌ، فَظَنَّ أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُرْطَ وَالْخَاتَمَ، وَبِلاَلٌ يَأْخُذُ فِي طَرَفِ ثَوْبِهِ‏.‏

وَقَالَ إِسْمَاعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ عَطَاءٍ وَقَالَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَشْهَدُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

98. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் உறுதியளிக்கிறேன் என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்களா அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில் நான் உறுதியளிக்கிறேன் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப்பட்டுள்ளது.

(33)باب الْحِرْصِ عَلَى الْحَدِيثِ
பாடம் : 33

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய செய்திகளைக் (ஹதீஸ்கள்) கற்பதன் மீது பேரவாக்கொள்ளுதல்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ ‏"‏‏.‏

99. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்? என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்கமாட்டார்கள் என நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர்தாம் என்றார்கள்.

(34)باب كَيْفَ يُقْبَضُ الْعِلْمُ
பாடம் : 34

கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்?

وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ، فَإِنِّي خِفْتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَ الْعُلَمَاءِ، وَلاَ تَقْبَلْ إِلاَّ حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلْتُفْشُوا الْعِلْمَ، وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لاَ يَعْلَمُ، فَإِنَّ الْعِلْمَ لاَ يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا. حَدَّثَنَا الْعَلاَءُ بْنُ عَبْدِ الْجَبَّارِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ بِذَلِكَ، يَعْنِي حَدِيثَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ إِلَى قَوْلِهِ ذَهَابَ الْعُلَمَاءِ.

உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய செய்தி (ஹதீஸ்)களை ஆராய்ந்து அதனை எழுதி(த் தொகுத்து) வைத்துக் கொள்வீர்களாக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் மார்க்க அறிஞர்கள் (இவ்வுலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும்போது) நபி (ஸல்) அவர்களின் செய்தி (ஹதீஸ்)களைத் தவிர வேறு எதையும் (பதிவுசெய்ய) ஏற்கக்கூடாது. (கற்றவர்கள்) அறிவைப் பரப்பட்டும்; கல்லாதவர்களுக்கு அது கற்பிக்கப்படும்வரை கற்றோர் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி இரகசியமாக இருக்கும்போதே அழிகிறது.

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து வரும் (மேற்கண்ட) அறிவிப்பில் அறிஞர்கள் (உலகைவிட்டுச்) சென்றுவிடுவார்கள் என்பது வரைதான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்ததாகக் காணப்படுகிறது.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا، يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ، حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا، اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالاً فَسُئِلُوا، فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا ‏"‏‏.

قَالَ الْفِرَبْرِيُّ حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ نَحْوَهُ‏.‏

100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கல்வியை(த் தன்) அடியார்களிடமிருந்து ஒரேடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான். ஆயினும், அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் (தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத்தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழிகெட்டுப் போவார்கள்; பிறரையும் வழி கெடுப்பார்கள்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே கருத்தில் அமைந்த இன்னோர் ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(35)باب هَلْ يُجْعَلُ لِلنِّسَاءِ يَوْمٌ عَلَى حِدَةٍ فِي الْعِلْمِ
பாடம் : 35

பெண்களின் கல்விக்காகத் தனியே ஒரு நாளை ஒதுக்கலாமா?

حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي ابْنُ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،‏.‏ قَالَتِ النِّسَاءُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غَلَبَنَا عَلَيْكَ الرِّجَالُ، فَاجْعَلْ لَنَا يَوْمًا مِنْ نَفْسِكَ‏.‏ فَوَعَدَهُنَّ يَوْمًا لَقِيَهُنَّ فِيهِ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ، فَكَانَ فِيمَا قَالَ لَهُنَّ ‏"‏ مَا مِنْكُنَّ امْرَأَةٌ تُقَدِّمُ ثَلاَثَةً مِنْ وَلَدِهَا إِلاَّ كَانَ لَهَا حِجَابًا مِنَ النَّارِ ‏"‏‏.‏ فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ فَقَالَ ‏"‏ وَاثْنَيْنِ ‏"‏‏.


101. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருசமயம்) பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், (நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, எங்களுக்காக (தனியாக) ஒருநாளை ஒதுக்குங்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒருநாளை நபி (ஸல்) அவர்கள் வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தைகளில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்து விடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள் என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி, இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான் என்றும் அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَصْبَهَانِيِّ، قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ‏ "‏ ثَلاَثَةً لَمْ يَبْلُغُوا الْحِنْثَ ‏"‏‏.‏

102. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில் பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் இழந்துவிட்டால் அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

(36)باب مَنْ سَمِعَ شَيْئًا، فَرَاجَعَ حَتَّى يَعْرِفَهُ
பாடம் : 36

ஒரு செய்தியைக் கேட்டுவிட்டு அதனை (நன்றாகப்) புரிந்துகொள்ளும் வரை அதையொட்டி மீண்டும் மீண்டும் கேள்விகேட்பது.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ إِلاَّ رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ حُوسِبَ عُذِّبَ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَ لَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى ‏{‏فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا‏}‏ قَالَتْ فَقَالَ ‏"‏ إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ، وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ ‏"‏‏.‏


103. இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்விகேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், எவர் (மறுமை நாளில் துருவித்துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார் என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் (குர்ஆனில்) வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச்சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளியமுறையில் கணக்கு வாங்கப்படும் (84:8) என்றல்லவா கூறுகின்றான்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார் என்று கூறினார்கள்.

(37)باب لِيُبَلِّغِ الْعِلْمَ الشَّاهِدُ الْغَائِبَ
பாடம் : 37

இந்தக் கல்வியை இங்கே வந்திருப்போர் வராதவர்களுக்குச் சொல்லிவிடட்டும்!

قَالَهُ ابْنُ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.


இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ، عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهْوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلاً قَامَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ، سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَاىَ، حِينَ تَكَلَّمَ بِهِ، حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ ‏ "‏ إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ، وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، فَلاَ يَحِلُّ لاِمْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا، وَلاَ يَعْضِدَ بِهَا شَجَرَةً، فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقُولُوا إِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لِرَسُولِهِ، وَلَمْ يَأْذَنْ لَكُمْ‏.‏ وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ، ثُمَّ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ ‏"‏‏.‏ فَقِيلَ لأَبِي شُرَيْحٍ مَا قَالَ عَمْرٌو قَالَ أَنَا أَعْلَمُ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ، لاَ يُعِيذُ عَاصِيًا، وَلاَ فَارًّا بِدَمٍ، وَلاَ فَارًّا بِخَرْبَةٍ‏.‏


104. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை நோக்கி ஒரு படைப்பிரிவுகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: எனது காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றிய போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்கு புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தை சிந்துவதோ இங்குள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒருபகல் பொழுது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக் கொண்டு) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்)தான் அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை என்று சொல்லிவிடுங்கள். எனக்குக் கூட (நேற்றைய) பகல்பொழுது மட்டுமே (இங்கு போர்புரிய) அனுமதியளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மைக்கு மீண்டு வந்துவிட்டது. (நாம் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறினார்.

அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்? என்று என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும், மரணதண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடிவந்தவனுக்கும், திருட்டுக்குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ர் கூறினார் என்றேன்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، ذُكِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ ـ قَالَ مُحَمَّدٌ وَأَحْسِبُهُ قَالَ وَأَعْرَاضَكُمْ ـ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، أَلاَ لِيُبَلِّغِ الشَّاهِدُ مِنْكُمُ الْغَائِبَ ‏"‏‏.‏ وَكَانَ مُحَمَّدٌ يَقُولُ صَدَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ ذَلِكَ ‏"‏ أَلاَ هَلْ بَلَّغْتُ ‏"‏ مَرَّتَيْنِ‏.‏

105. அபூபக்ரா (நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின் போது ஆற்றிய பேருரையில்) ...எனவே, (மக்களே!) உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமிக்கவையாகும். அறிந்துகொள்ளுங்கள்: இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு (நான் கூறியவற்றை) சொல்லிவிடட்டும்! என்று கூறினார்கள். மேலும் (மக்களுக்குத் தெரிவிக்கும்படி என்னிடம் பணிக்கப்பட்டவற்றை) நான் சமர்ப்பித்து விட்டேனா? என்றும் இரண்டு முறை (மக்களைப் பார்த்துக்) கேட்டார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை செவியுற்ற அன்னாரின் புதல்வர்) இப்னு அபீபக்ரா (ரஹ்) அவர்கள், (உங்கள் உடைமைகளும் என்பதற்கடுத்து) உங்கள் மானமரியாதைகளும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே நடந்தது என்று (இந்த நபிமொழியை அறிவித்த பின்) கூறுவது வழக்கம்.

(38)باب إِثْمِ مَنْ كَذَبَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
பாடம் : 38

நபி (ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பாவம்.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مَنْصُورٌ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ سَمِعْتُ عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ ‏"‏‏.‏


106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நான் சொல்லாததை நான் சொன்னதாக) என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ لِلزُّبَيْرِ إِنِّي لاَ أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا يُحَدِّثُ فُلاَنٌ وَفُلاَنٌ‏.‏ قَالَ أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ ‏ "‏ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.


107. அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நான் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம், (தந்தையே!) உங்களைப் போன்று (நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்ட) இன்னார் இன்னாரெல்லாம் நபி (ஸல்) அவர்கள் பற்றி (அதிகமாக) அறிவிப்பது போல் தாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் செவியுற்றதேயில்லையே, ஏன்? என்று கேட்டேன். அதற்கு ஸுபைர் (ரலி) அவர்கள், (மகனே) இதோ பார்! மெய்யாகவே நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களைப் பிரிந்ததே இல்லை. ஆயினும், என்மீது யார் பொய்சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். (அதனால் தான் நான் அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கவில்லை) என்றார்கள்.

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، قَالَ أَنَسٌ إِنَّهُ لَيَمْنَعُنِي أَنْ أُحَدِّثَكُمْ حَدِيثًا كَثِيرًا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ تَعَمَّدَ عَلَىَّ كَذِبًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏


108. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால் தான், உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக்கொள்கிறேன்.

حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏


109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

இதை சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏

110. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முஹம்மத், அஹ்மத் என்ற) எனது இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள்; (அபுல்காசிம் என்ற எனது குறிப்புப் பெயரை உங்கள் குறிப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் எவர் என்னைக் கண்டாரோ அவர் என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(39)باب كِتَابَةِ الْعِلْمِ
பாடம் : 39

கல்வியை எழுதி வைத்துக் கொள்ளல்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قُلْتُ لِعَلِيٍّ هَلْ عِنْدَكُمْ كِتَابٌ قَالَ لاَ، إِلاَّ كِتَابُ اللَّهِ، أَوْ فَهْمٌ أُعْطِيَهُ رَجُلٌ مُسْلِمٌ، أَوْ مَا فِي هَذِهِ الصَّحِيفَةِ‏.‏ قَالَ قُلْتُ فَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ قَالَ الْعَقْلُ، وَفَكَاكُ الأَسِيرِ، وَلاَ يُقْتَلُ مُسْلِمٌ بِكَافِرٍ‏.‏


111. அபூஜுஹைஃபா (வஹ்புனிஸ் ஸுவாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது :

அலீ (ரலி) அவர்களிடம், (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகிய) உங்களிடம் எழுதப்பட்ட ஏடு ஏதேனும் உள்ளதா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் வேதத்தையும், (குர்ஆனிலிருந்து) ஒரு முஸ்லீமான மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும், மேலும் இந்த எழுதப்பட்ட சுவடியில் இருப்பவற்றையும் தவிர, வேறு (எங்களிடம்) ஒன்றுமில்லை என்றார்கள். நான் இந்தச் சுவடியில் என்ன இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டங்கள்), போர்க்கைதிகளை (பணம்கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ) விடுவிப்பது, மற்றும் நிராகரிப்பாளன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக்கூடாது (என்பன பற்றிய சட்டங்கள் இதில் உள்ளன) என்று பதிலளித்தார்கள்.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ خُزَاعَةَ، قَتَلُوا رَجُلاً مِنْ بَنِي لَيْثٍ عَامَ فَتْحِ مَكَّةَ بِقَتِيلٍ مِنْهُمْ قَتَلُوهُ، فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَكِبَ رَاحِلَتَهُ، فَخَطَبَ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْقَتْلَ ـ أَوِ الْفِيلَ شَكَّ أَبُو عَبْدِ اللَّهِ ـ وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُؤْمِنِينَ، أَلاَ وَإِنَّهَا لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي أَلاَ وَإِنَّهَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، أَلاَ وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ، لاَ يُخْتَلَى شَوْكُهَا، وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ تُلْتَقَطُ سَاقِطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ، فَمَنْ قُتِلَ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُعْقَلَ، وَإِمَّا أَنْ يُقَادَ أَهْلُ الْقَتِيلِ ‏"‏‏.‏ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ‏.‏ فَقَالَ ‏"‏ اكْتُبُوا لأَبِي فُلاَنٍ ‏"‏‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ إِلاَّ الإِذْخِرَ يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِلاَّ الإِذْخِرَ، إِلاَّ الإِذْخِرَ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ يُقَالُ يُقَادُ بِالْقَافِ‏.‏ فَقِيلَ لأَبِي عَبْدِ اللَّهِ أَىُّ شَىْءٍ كَتَبَ لَهُ قَالَ كَتَبَ لَهُ هَذِهِ الْخُطْبَةَ‏.‏


112. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூலைஸ் குலத்தார் (ஒருவர்), குஸாஆ குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்து விட்டதற்குப் பதிலாக அவர்களில் ஒருவரை குஸாஆ குலத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இந்த செய்தி நபி (ஸல்) அவர்ளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தவர்களாக ஓர் உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த (ப் புனித மக்கா) நகரைவிட்டும் யானைப் படையை அல்லது கொலையை தடுத்துவிட்டான். மேலும் மக்காவாசிகள் மீது அல்லாஹ் தன் தூதரையும் (ஓரிறை) நம்பிக்கையாளர்களையும் அதிகாரம் செலுத்தவைத்தான். எச்சரிக்கை! மக்காவில் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. நினைவில் கொள்க! எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இங்கு போர்செய்வது இந்த நேரத்திலேயே (முற்றாகத்) தடைசெய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் பிடுங்கப்படக் கூடாது; இதன் மரங்கள் வெட்டப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) அறிவிப்புச் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர்) எடுக்கக்கூடாது. (இனிமேல்) எவரேனும் கொலை செய்யப்பட்டுவிட்டால் அவருடைய உறவினர்கள் உயிர் ஈட்டுத்தொகை பெற்றுக்கொள்ளல் அல்லது பழிக்குப்பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம் என்று கூறினார்கள்.

அப்போது யமன்வாசிகளில் (அபூஷாஹ் எனும்) ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இ(ந்தப் பிரசங்கத்)தை எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்! என்று கேட்டுக்கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இன்னாரின் தந்தைக்கு (அபூஷாஹிற்கு) எழுதிக் கொடுத்துவிடுங்கள் என்றார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடி கொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத்தாவரமான) இத்கிர் புல்லிற்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில் நாங்கள் அதனை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார். நபி (ஸல்) அவர்கள் இத்கிர் புற்களைத் தவிர என்று சொன்னார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள அய்யுகாத எனும் சொல்லை) யுகாது என்றும் வாசிக்கப்படுகிறது.

என்னிடம் (அபூஷாஹ் எனும்) அவருக்கு எதை எழுதிக் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? என்று கேட்கப்பட்டது. நான், நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய இந்த உரையைத் தான் (எழுதித் தரச்சொன்னார்கள்) என்று பதிலளித்தேன்.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي وَهْبُ بْنُ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ مَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْهُ مِنِّي، إِلاَّ مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلاَ أَكْتُبُ‏.‏ تَابَعَهُ مَعْمَرٌ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي هُرَيْرَةَ‏.‏


113. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னைவிட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதிவைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதிவைத்துக் கொண்டதில்லை.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم وَجَعُهُ قَالَ ‏"‏ ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبُ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ ‏"‏‏.‏ قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم غَلَبَهُ الْوَجَعُ وَعِنْدَنَا كِتَابُ اللَّهِ حَسْبُنَا فَاخْتَلَفُوا وَكَثُرَ اللَّغَطُ‏.‏ قَالَ ‏"‏ قُومُوا عَنِّي، وَلاَ يَنْبَغِي عِنْدِي التَّنَازُعُ ‏"‏‏.‏ فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ كِتَابِهِ‏.‏


114. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடைய (மரணத் தறுவாயில் நோயின்) வேதனை அதிகமானபோது என்னிடம் ஒரு ஏடு கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் (இறுதி உபதேசமாக) ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள் என்றார்கள். (நபி அவர்களின் வேதனையை அறிந்த) உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது; (அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) நம்மிடம்தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே! நமக்கு (அதுவே) போதும் என்றார்கள். உடனே (அங்கிருந்த மக்கள்) கருத்து வேறுபாடு கொண்டனர். கூச்சல் அதிகரித்தது. இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள், என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்; என்னருகில் (இது போன்ற) சச்சரவுகள் இருப்பது தகாது என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்து விட்டு), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் மத்தியில் குறுக்கீடு ஏற்பட்டதே முழுக்க முழுக்க சோதனையாகும் என்று கூறியபடி (எங்களிடமிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.

(40)باب الْعِلْمِ وَالْعِظَةِ بِاللَّيْلِ
பாடம் : 40
இரவில் கற்(பிப்)பதும் போதிப்பதும்.

حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، وَعَمْرٍو، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتِ اسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ ‏ "‏ سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الْفِتَنِ وَمَاذَا فُتِحَ مِنَ الْخَزَائِنِ أَيْقِظُوا صَوَاحِبَاتِ الْحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ ‏"‏‏.‏


115. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து (பதற்றத்துடன்) விழித்தெழுந்து அல்லாஹ் தூயவன்! இன்றிரவு இறக்கிவைக்கப்பட்ட சோதனைகள் (குழப்பங்கள்)தாம் என்ன! (இன்றிரவு) திறந்து விடப்பட்ட கருவூலங்கள்தாம் என்ன! என்று கூறிவிட்டு, (தம் துணைவியரை மனத்தில் கொண்டு) இந்த அறைகளிலுள்ள பெண்களை எழுப்பிவிடுங்கள்! (அவர்கள் அல்லாஹ்வை வணங்கட்டும்.) ஏனெனில், இவ்வுலகில் உடை அணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுவுலகில் நிர்வாணிகளாய் இருப்பார்கள் என்று கூறினார்கள்.



No comments:

Post a Comment