Monday, November 7, 2016

அன்னை ஜைனப் பின்த் குஸைமா ( ரழி )

அன்னை ஜைனப் பின்த் குஸைமா ( ரழி ) வாழ்க்கை வரலாறு

அன்னை ஹஃப்ஸா ரழி அவர்களைத் திருமணம் முடித்து பிறகு ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு . உஹுத் போருக்குப் பின் அன்னை ஜைனப் பின் த் குஸைமா ரழி அவர்களை நபி ஸல் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

குஸைமா , ஹின் த் பின் த் அவ்ஃப் தம்பதியருக்கு அன்னை ஜைனப் அவர்கள் மகளாகப் பிறந்தார்கள். இவர்கள் நபி ஸல் அவர்களின் மற்றொரு மனைவியான மைமூனா ரழி அவர்களின் தாய்வழி சகோதரியாவார். அன்னை ஜைனப் பின் த் குஸைமா ரழி அவர்களின் தாயாரும் மைமூனா ரழி அவர்களின் தாயாஅரும் ஒருவரே !

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் 2885

( ஒரே நேரத்தில் ஒரு தாய் வயிற்றுச் சகோதரிகளை திருமணம் முடிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது எனினும் ஒருவர் இறந்த பின்னர் மற்றொரு சகோதரியைத் திருமணம் முடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்னை ஜைனப் ரழி அவர்கள் இறந்த பிறகே அவர்களது சகோதரி மைமூனா ரழி அவர்களை நபி ஸல் அவர்கள் திருமணம் புர்ந்தார்கள் )

அன்னை ஜைனப் ரழி அவர்களின் முதல் கணவர் விஷயத்தில் வரலாற்று அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல் கணவர் பெயர் துபைல் பின் அல் ஹாரிஸ் இவர் ஜைனப் ரழி அவர்களை விவாகரத்துச் செய்து விட்டர் இவருக்குப் பின் உபைதா பின் அல் ஹாரிஸ் ரழி மணமுடித்துக் கொண்டார் . இவர் பத்ருப் போரில் ஷஹீத் ஆனார்.

நூல் : அல் இஸாபா 11230

ஜைனப் ரழி யின் முதல் கணவர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் ரழி ஆவார் இவர் உஹுதுப் போரில் கொல்லப்பட்ட பின் நபி ஸல் அவர்கள் அன்னை ஜைனப் ரழி யைத் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் சிலர் குறிப்பிடுகின்றார்கள் இந்தக் கருத்து வலிமையானதாகும்.

நூல் : இஸ்தி ஆப் 3359

அன்னை ஜைனப் ரழி அவர்களின் திருமணத்தில் வலீமாவாக நபி ஸல் அவர்கள் ஒட்டகத்தை அறுத்து விருந்தளித்தார்கள் மக்கள் கூட்டம் அதிகரித்த போது சில நபித் தோழர்கள் மற்றவர்கள் சாப்பிடுவதற்காக அங்கிருந்து சென்று விட்டார்கள்.அடுத்த நாள் ஒரு மனிதர் பாயசத்துடன் நபி ஸல் அவர்களை தனியாகச் சந்தித்தார். அந்த பாயாசத்துடன் அனைவரும் ஒன்று கூடினர். நபி ஸல் அவர்கள் பரக்கத்திற்காக து ஆச் செய்தார்கள்.

இச்செய்தியை சுபைர் பின் பக்கார் அறிவிக்கின்றார் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும்.

அன்னை ஜைனப் ரழி அவர்கள் அறியாமைக் காலத்தில் உம்முல் மஸாகீன் ( ஏழைகளின் தாய் ) என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார்கள் . இவர்கள் ஏழை , எளியவருக்கு மற்றவர்களை விட அதிகம் உணவளிப்பவர்களாக இருந்ததால் இந்த சிறப்பு கிடைத்தது

நூல் : அல் இஸாபா 11230

அன்னை ஜைனப் ரழி அவர்கள் நபி ஸல் அவர்களோடு மிகக் குறைந்த காலம் மட்டுமே வாழ்ந்துள்ளார்கள்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு ரமளான் மாதம் நபி ஸல் அவர்கள் ஜைனப் ரழி அவர்களை திருமணம் முடிந்தார்கள். ஹிஜ்ரி 4 ம் ஆண்டு ரபீ உல் அவ்வல் மாதம் ஜைனப் ரழி மரணித்தார்கள்.

நூல் : அல் இஸாபா 11230

சுமார் எட்டு மாதங்கள் மட்டுமே நபி ஸல் அவர்களோடு வாழ்ந்துள்ளார்கள். அப்போது அவர்களின் வயது 30 ஆகும் மற்ற மனைவியருடன் ஒப்பிடும் போது அன்னை ஜைனப் ரழி அவர்கள் குறைந்த வயதிலேயே மரணித்தவரும் கதீஜா ரழி அவர்களுக்குப் பின் நபி ஸல் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்தவரும் ஆவார்கள்.

நபி ஸல் அவர்கள் அன்னை ஜைனப் ரழி அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி பகீஃ என்ற பொது மையவாடியில் அடக்கம் செய்தார்கள்.

நூல் : தபகாத் இப்னு அத் பாகம் 8 பக்கம் 115

நபி ஸல் அவர்களுடன் குறைந்த காலமே வாழ்ந்ததால் அவர்களை பற்றி வரலாற்று நூற்களிலும் நபிமொழித் தொகுப்புகளிலும் குறைந்த செய்திகளே இடம் பெற்றுள்ளன.



No comments:

Post a Comment