எத்தியோப்பியா (அபிஸீனியா) ஹிஜ்ரத்
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் இருந்த
போது முஸ்லிம்களுக்கு எதிரிகள் கொடுத்தத் தொல்லைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே
சென்றது. எதிரிகளின் கொடுமையிலிருந்து சில
பேரையாவது காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் மக்காவின் அண்டை நாடான அபிஸீனியா (எதியோப்பியாவிற்கு)
தம் தோழர்களை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
அதனடிப்படையில் நபித்தோழர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஹிஜ்ரத் செய்தார்கள். முதலணியில் உஸ்மான் (ரலி), அவர்களின் மனைவி ருகைய்யா(ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர்
உட்பட மொத்தம் 4 பெண்களும் 11 ஆண்களும் ஹிஜ்ரத் செய்தனர்.
அதன் பிறகு இரண்டாவதணியில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப்(ரலி), அபூ மூஸô(ரலி), உம்மு ஹபீபா(ரலி) ஆகியோர் உட்பட மொத்தம் 83 ஆண்களும் 18 பெண்களும் ஹிஜ்ரத் செய்தனர்.
(ஆதாரம் : ஃபத்ஹுல்பாரி, இர்ஷாதுஸ்ஸரி)
முஸ்லிம்களுக்கு எத்தியோப்பியாவில் ஓரளவு
நிம்மதி கிடைத்தது. சில முஸ்லிம்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்த நபி (ஸல்) அவர்கள், தாம் செல்லாமல் அல்லாஹ்வின்
கட்டளையை எதிர்பார்த்து மக்காவிலேயே இருந்தார்கள்.
இந்நிலையில் இணைவைப்பவர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் அபூபக்ர்(ரலி) அவர்களும்
எத்தியோப்பியா சென்றார்கள். செல்லும் வழியில் பர்க்குல் கிமாத் என்ற இடத்தை அடைந்த
போது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் (அபூபக்ர்(ரலி) அவர்களை முன்பே அறிந்திருந்தார்.)
நற்காரியங்கள் புரியும் உங்களைப் போன்றவர்கள் சொந்த நாட்டை விட்டும் வெளியேறக் கூடாது
என்று கூறி மக்கா தலைவர்களிடம் நீங்கள் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் உங்கள் இறைவனை
வணங்க நான் உத்திரவாதம் வாங்கித் தருகிறேன் என்று கூறி மக்காவிற்கு அழைத்துச் சொன்றார்.
(பார்க்க புகாரீ 2298)
இதன் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு ஹிஜ்ரத் செய்யக் கூடிய இடம் கற்களும் பேரித்தம்
மரங்களும் நிறைந்த பகுதியாகக் கனவில் காட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அது யமாமாவாக
இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அல்லாஹ், மதீனா என்று பின்னர் அறிவித்தான். (புகாரீ 3622)
அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர்(ரலி) அவர்களும் மதீனா
புறப்பட்டு சொன்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர்(ரலி) அவர்களும் தப்பித்து மதீனா
சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்த மக்கா காஃபிர்கள், நபி (ஸல்) அவர்களையும்
அபூபக்ர்(ரலி) அவர்களையும் உயிருடன் அல்லது கொலை செய்து வருபவருக்கு நூறு ஒட்டகம் பரிசு
என்று அறிவித்தனர். இதற்கு ஆசைப்பட்டு பலர் தேடத் தொடங்கினர்.
இதில் சுராக்கா அவர்களும்
ஒருவர். ஆனால் இறைவனின் ஆற்றலின் வெளிப்பாடாக அவர்களுடைய குதிரை மண்ணில் புதைய உண்மையை
உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். (பார்க்க : புகாரீ 3906)
எதிரிகளிடமிருந்து தப்பிக்க
ஸவ்ர் என்ற குகையில் தஞ்சம் புகுந்தனர். (அல்குர்ஆன் 9:40) பின்னர் அல்லாஹ்வின் பாதுகாப்புடன் மதீனாவிற்கு ஹிஜ்ரத்
செய்தார்கள். இவ்விருவருக்குப்பின் பல நபித்தோழர்களும் ஹிஜ்ரத் செய்தார்கள்.
மேற்கண்ட சம்பவத்தை விரிவாக அறிய பார்க்க (புகாரீ
3905,3924,3925)
No comments:
Post a Comment