5. நற்காரியங்கள் பல…
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال كل سلامى عليه صدقة كل يوم يعين الرجل
في دابته يحامله عليها أو يرفع عليها متاعه صدقة والكلمة الطيبة وكل خطوة يمشيها إلى
الصلاة صدقة ودل الطريق صدقة
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு
மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரின் வாகனத்தில்
ஏறிட உதவுவது, அல்லது அவரின் வாகனத்தின் மீது அவரின் மூட்டை முடிச்சுகளை ஏற்றி
வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர்
அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத்
தருவதும் தர்மமாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 2981 ) முஸ்லிம்
( 1835 ) அஹம்த் (27400)
விளக்கம் :
அல்லாஹ் நமது உடலை மிகப் பெரிய அதிசயமாகப் படைத்துள்ளான்.
அதில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் உள்ள
மூட்டுக்களும் முக்கியமானவை. இந்த மூட்டுக்கள் மூலமாகத் தான் கைகளையும்
கால்களையும் மடக்க முடிகிறது.
மேலும் வெளியில் சென்று
வருவதற்கும் உழைப்பதற்கும் இவை முக்கிய பங்கை ஆற்றுகின்றது.
எனவே இந்தச் சிறப்பை
அல்லாஹ் நமக்கு வழங்கியிருப்பதால் அதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் ஒவ்வொரு
மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும் .
அதற்குரிய எளிய முறைகளை நபி ஸல் அவர்கள்
கற்றுத் தந்துள்ளார்கள். நடைமுறையில் நாம் சந்திக்கும் பல இடங்களில் நன்மையைப்
பெறுவதற்குரிய வழிவகையை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
வாகனத்தில் ஏற சிரமப்படும்
எத்தனையோ வயோதிகர்களையும் உடல் நிலை பாதிக்கப்பட்டோரையும் நாம் பார்க்கிறோம் .
அவர்களை வாகனத்தில் ஏற்றி விட உதவி செய்வதன் மூலம் தர்மம் செய்த நன்மையைப்
பெறலாம்.
இதைப் போன்று அவர்கள்
கொண்டு வந்துள்ள பொருட்களை ஏற்ற முடியாமல் சிரமப்படும் போது அவற்றை ஏற்றி விட உதவி
செய்வதன் மூலமும் வழி தெரியாமல் திண்டாடுபவருக்கு வழிகாட்டுவதன் மூலமும்
தொழுகைக்கு அதிகமதிகம் சென்று வருவதிலும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
No comments:
Post a Comment