Sunday, November 13, 2016

மக்கா வாழ்க்கை



மக்கா வாழ்க்கை

                நபி(ஸல்) அவர்கள் நபித்துவத்தை ஏற்றவுடன் ஓரிறைக் கொள்கையை  தங்களது நெருங்கிய உறவினர்களுக்குக் தெரியப்படுத்துமாறு அல்லாஹ் கட்டளையிட்டான்.

(முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! 

(அல்குர்ஆன்: 26:214)

உடனே, நபி(ஸல்) அவர்கள் தனது உறவினர்களை ஸஃபா என்ற மலைக்கு அழைத்து ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொன்னார்கள்.  

அதனால் ஆத்திரம் அடைந்த அபூலஹப் (நபி(ஸல்) அவர்களின்  தந்தையின் சகோதரர்) நபி(ஸல்) அவர்களை நாசமாகு! இதற்காகத்தான் எங்களை ஒன்று கூட்டினாயா? என்று முதல் எதிர்ப்பைக் காட்டினான். இதனால்தான் அல்லாஹ், இறைத்தூதரை "நாசமாகு!" என்று கூறிய அபூலஹப் நாசமாகட்டும் என்று 111 அத்தியாயத்தை இறக்கினான். 

இதுவே ஏகத்துவக் கொள்கையை எடுத்துச் சொன்னதால் ஏற்பட்ட முதல் சோதனையாகும். 

(புகாரீ 4770)

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப்பிரச்சாரத்தை மக்கள் மத்தில் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.  

அதற்காக மக்கள் நபி(ஸல்) அவர்களை மிகப்பெரும் துயரத்திற்குள்ளாக்கினார்கள்.  நபி(ஸல்) அவர்கள், கஅபாவில் தொழுதுகையில் ஸஜ்தாவில் இருக்கும்போது ஒட்டகத்தின் மலக்குடலை அவர்கள் மீது போட்டு அவர்கள் எழ முடியாமல் தவித்ததைப் பார்த்து அபூஜஹ்ல் கூட்டத்தினர் எள்ளி நகையாடினர். (புகாரீ 2934,4958)

ஓரிறைக் கொள்கையைச் சொன்ன நபி(ஸல்) அவர்கள் துன்புறுத்தப்பட்டதோடு ஓரிறைக் கொள்கையை ஏற்ற நபித்தோழர்களும் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர். நபித்தோழர்களில் சிலர் கொலையும் செய்யப்பட்டனர். அதிலே யாஸிர் (ரலி) அவர்களும் அவரது மனைவி சுமைய்யா(ரலி) அவர்களும் அடங்குவர்.  

(ஆதாரம்  ஃபத்ஹுல்பாரி)

பிலால்(ரலி), அபூதர்(ரலி), கப்பாப்(ரலி) ஆகியோர் மற்றும் பல நபித்தோழர்கள் கடுமையான முறையில் நோவினை செய்யப்பட்டார்கள். மேலும் விரிவாக அறிய  பார்க்க (புகாரீ  1276,3728,3861,4525)

மக்கத்துக் காஃபிர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்க மறுத்து கடும் வேதனைகளை நபியவர்களுக்குத் தந்ததால் பக்கத்தில் இருந்த தாயிஃப் நகரத்திற்கு சென்று நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அங்கும்  மக்களிடத்தில் எதிர்ப்பும் கடும் தொல்லைகளும் ஏற்பட்டன. மக்காவில் இருந்ததைவிட காஃபிர்களின் கொடுமை கூடுதலாக இருந்ததாக நபி(ஸல்) அவர்களே குறிப்பிட்டார்கள். (புகாரீ 3231)


இதற்கிடையில் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற சம்பவமும் நடந்தது.

No comments:

Post a Comment