Wednesday, November 23, 2016

பத்ருப் போர்



பத்ருப் போர்

                பத்ர் என்பது மக்காவுக்கும்  மதீனாவுக்கும் இடையே உள்ள ஓர் இடமாகும்.  இந்த இடத்தில் வைத்துத்தான் முஸ்லிம்களுக்கும்  காஃபிர்களுக்கும் இடையே போர் நடந்தது. 

எனவே இப்போருக்குப் பத்ருப் போர் என்ற பெயர் வந்தது.  இப்போர் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு (கி பி 624)  ரமளான் மாதம்  நடந்தது. 

  இப்போர்  நடந்தது 17ஆம் நாளிலா, 18ஆம் நாளிலா, 19 ஆம் நாளிலா அல்லது 21 ஆம் நாளிலா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு உள்ளது. இக்கருத்துக்களில் மிகவும் பிரபல்யமானது   இப்போர்  17 ஆம் நாளில் நடந்தது என்பதாகும். 


பத்ருப்போர் நடக்க காரணம்


நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த வரை, மக்கத்துக் காஃபிர்கள் அதிகமான துன்பத்தைக் கொடுத்து வந்தனர். துன்பம் தாங்காமல் மக்காவைத் துறந்து மதீனாவில் குடியேறினார்கள். அங்கும் எதிரிகளின் தொல்லை தொடர்ந்தது. 

அதன் ஆரம்பமாகத்தான் மக்கத்துக்காஃபிர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பதற்காக  யுத்த நிதி திரட்ட ஆரம்பித்தனர் . இதன் மூலம் அபூ சுஃப்யான்  தலைமையில் சுமார் 40 பேர் கொண்ட குழு சிரியா தேசத்தை நோக்கிப் புறப்பட்டது. 

சிரியாவில் வணிகம் செய்து பெரும் செல்வத்துடன் மக்கா நோக்கி அக்குழு வந்துகொண்டிருந்தது. இவர்களைத் தடுக்கும் முகமாக நபி(ஸல்) அவர்கள் அல் அப்வாஉ.. புவாத், உஷைரா  ஆகிய இடங்களில் முகாமிட்டார்கள்.  

இதையறிந்த வணிகக்குழு தப்பி விட்டது . நபி (ஸல்) அவர்கள் வாணிபக் கூட்டத்தை தாக்க வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்த அபூஸýஃப்யான் அவர்கள் மக்காவிற்கு இச்செய்தியை தெரிவித்தார்கள். இதையறிந்த அபூஜஹ்ல் கூட்டத்தினர் ஆட்களைத் திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி புறப்பட்டனர். கடல் மார்க்கமாகத் தப்பித்த அபூஸýஃப்யான் தலைமையிலான வணிகக்குழு, நாங்கள் பத்திரமாக வந்துவிட்டோம் திரும்பி வந்துவிடுங்கள் என்று செய்தி அனுப்பியும் அபூஜஹ்ல் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரியாமல் வரமாட்டோம் என்று கூறி பத்ர் நோக்கி சென்றனர். 

இந்நிலையில் ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் தாக்க வருகிறது என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள்  பத்ரை நோக்கிச்  சென்று   முகாமிட்டார்கள். அங்கு இரு சாராருக்கும் போர் மூண்டது.


                பத்ருப்போரில் முஸ்லிம்கள் தரப்பில் போரில்  கலந்த கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்ககை 313 லிருந்து 319 வரை இருந்துள்ளனர் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் கிடைக்கிறது.

 முஸ்லிம்களிடம் ஆயுதங்களும் வாகனங்களும்  மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன. எதிரணியில் ஆயிரத்திற்கும் நெருக்கமானவர்கள்  ஆயுத பலத்துடன் இருந்தனர். எனினும் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையே பத்ரில் வென்றது. 

எதிரிகளின் ஆட்பலமும் ஆயுதங்களும்  எடுபடவில்லை. இப்போரில்  எதிரிகள்  70 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக அபூஜஹ்ல் உட்பட பெரும் பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டனர். 70 பேர் சிறை வைக்கப்பட்டனர். முஸ்லிம்களில் 14 பேர் வீரமரணமடைந்தனர். முஹாஜிர்கள் 6 பேரும் அன்ஸரிகள் 8 பேருமாவர்.

 பத்ருப்போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சத்தியம் சிறிது காலம் அடிவாங்கினாலும் ஒரு நாள் அது வென்றே தீரும் என்பதற்கு பத்ருப்போர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. எண்ணிக்கையின் பலம் முக்கியமல்ல.  எண்ணத்தின் பலமே முக்கியம் என்பதை பத்ருப்போர் உணர்த்தியது. (ஆதாரம்  இப்னு கஸீர்)


                பத்ருப்போர் சம்பந்தப்பட்ட விளக்கங்களை மேற்கொண்டு அறிய பார்க்க (புகாரீ 2301, 3950. 3952, 3953, 3956, 3995, 3965,  3984, 3985,  3988,  3963, 3998,  3976,  3980,  3981)

No comments:

Post a Comment