Monday, May 29, 2017

வரவேற்கப் படும் பித்அத்துகளும் புறக்கணிக்கப்படும் நபிமொழிகளும்



                             வரவேற்கப் படும் பித்அத்துகளும் புறக்கணிக்கப்படும் நபிமொழிகளும்

இஸ்லாத்தின் அடிப்படை  திருக்குர்ஆன், நபிமொழிகள் என்ற இரண்டு மட்டும் தான். இஸ்லாத்தில் ஒரு காரியம் உள்ளது என்று ஒருவர் வாதிட்டால் அவர் அதற்குரிய ஆதாரத்தைத் திருக்குர்ஆன், நபிமொழிகளில் இருந்து தான் காட்ட வேண்டும்.

இதைப் போன்று வணக்கம் என்று கருதி ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கும் திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து ஆதாரம் காட்ட வேண்டும். இதற்குப் பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் ஹதீஸýம் சான்றாக உள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ ﴿٣٣﴾

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள் ! (அல்குர்ஆன் 47:33)

عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‏"‏
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (3541)

இந்த முக்கியமான அடிப்படையைக் கவனிக்கத் தவறியதால் ஏராளமான நூதன பழக்கங்கள் இஸ்லாமியர்களிடம் வணக்கமாகக் கருதப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருகிறது.
திருக்குர்ஆனும் நபி மொழிகளும் நமக்குக் கட்டளையிடாத நிபந்தனை களை விதிப்பதும் அதை நடைமுறைப் படுத்த முனைவதும் கடுமையான குற்றமாகும்.

قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اشْتَرِي وَأَعْتِقِي، فَإِنَّ الْوَلاَءَ لِمَنْ أَعْتَقَ ‏"‏‏.‏ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْعَشِيِّ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ ‏"‏ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ ‏"‏‏.

நபி (ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் புகழ்ந்து ""அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார் களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது, (செல்லாதது) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனை தான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப் படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ (2155)

புதுமையான காரியங்களைப் புகுத்துவதும் அதை அங்கீகரிப்பதும் அல்லாஹ்வின் பார்வையில் மாபெரும் குற்றமாகும்.  மேலும் அதனால் எந்த நன்மையும் கிடைக்காததுடன் மறுமையில் தண்டனையும் கிடைக்கும்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلاَ صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ ‏"‏ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ ‏"‏ ‏.‏ وَيَقُولُ ‏"‏ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ‏"‏ ‏.‏ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ ‏"‏ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ‏"‏ ‏.‏ ثُمَّ يَقُولُ ‏"‏ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالاً فَلأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَىَّ وَعَلَىَّ ‏"‏ ‏.‏

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1573)

مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلاَ هَادِيَ لَهُ إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْىِ هَدْىُ مُحَمَّدٍ وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلَّ ضَلاَلَةٍ فِي النَّارِ

நஸயீயின் அறிவிப்பில்... ""ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும்'' என்று இடம் பெற்றுள்ளது.

மார்க்கத்தின் பெயரால் இல்லாத ஒன்றை உருவாக்குவது நரகத்தில் கொண்டு சேர்க்கும் மாபெரும் பாவமான காரியம் என்று நபிகளார் தெளிவாக எச்சரிக்கை செய்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தனை எச்சரிக்கை இருந்தும் கூட மார்க்கத்தின் பெயரால் வணக்கமாகக் கருதி செய்யப்படும் பெரும்பாலான காரியங்களுக்கு திருக்குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ ஆதாரங்கள் கிடையாது. வெறும் கற்பனைக் கதைகளும் நாட்டு நடப்புகளுமே இதற்கு ஆதாரமாக உள்ளன.

உதாரணமாக பூரியான் பாத்திஹா என்று ரஜப் மாத்தில் ஓதப்படும் பாத்திஹாவிற்கு எந்தத் திருக்குர்ஆன் வசனம் சான்றாக உள்ளது? எந்த நபிமொழி சான்றாக உள்ளது? ஒரு ஆதாரமும் கிடையாது.

இதற்கு உள்ள ஒரே ஆதாரம் ""முன்னோர்கள் செய்தது, நடைமுறையில் உள்ளது'' என்பது தான். இதைப் போன்று ஏராளமான காரியங்களுக்குச் சான்றுகள் எதுவும் கிடையாது என்பதை நினைவில் வையுங்கள்.
இந்நேரத்தில் மார்க்கத்தில் அனுமதியில்லாத காரியங்களில் ஆர்வம் காட்டும் இஸ்லாமியர்கள், நபிகளார் காட்டித் தந்த ஏராளமான சுன்னத்துகளைப் புறக்கணிக்கும் மோசமான நிலையையும் நாம் காண்கிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.இன்ஷா அல்லாஹ்


No comments:

Post a Comment