Saturday, June 3, 2017

நபிகளாரின் வாழ்நாளிலேயே நிறைவேறிய முன்னறிவிப்புகள்



நபிகளாரின் வாழ்நாளிலேயே நிறைவேறிய முன்னறிவிப்புகள்

1.மனிதர்களால் கொல்லப்பட முடியாத மாமனிதர் நபிகளார்

நபி (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்து அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏரளாமான எதிரிகளை சம்பாதித்து வைத்திருந்தார்கள். நபியவர்களை எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் என அன்றைய சமுதாயத்திலுள்ள எதிரிகள் பல வகையிலும் முயற்சி செய்தனர்.

 அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பா நபி(ஸல்) அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர் குறைஷிகள். இது வெறும் கற்பனையோ அல்லது யூகமோ அல்ல. குறைஷிகளின் இந்த வஞ்சக சூழ்ச்சியினால் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களின் பாதுகாப்பில் இரவைக் கழிந்து வந்தார்கள்.

قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَهِرَ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ قَالَ ‏"‏ لَيْتَ رَجُلاً مِنْ أَصْحَابِي صَالِحًا يَحْرُسُنِي اللَّيْلَةَ ‏"‏‏.‏ إِذْ سَمِعْنَا صَوْتَ سِلاَحٍ فَقَالَ ‏"‏ مَنْ هَذَا ‏"‏‏.‏ فَقَالَ أَنَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، جِئْتُ لأَحْرُسَكَ‏.‏ وَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்' என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

 நூல் : புஹாரி ( 2885)

தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது சில இரவுகளில் மட்டுமல்ல; மாறாக, மதீனா வந்ததிலிருந்து தொடர்ந்து நபித்தோழர்களில் யாராவது ஒருவர் இரவில் கண் விழித்து நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தனர்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحْرَسُ حَتَّى نَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏:‏ ‏(‏ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ‏)‏ فَأَخْرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَأْسَهُ مِنَ الْقُبَّةِ فَقَالَ لَهُمْ ‏"‏ يَا أَيُّهَا النَّاسُ انْصَرِفُوا فَقَدْ عَصَمَنِي اللَّهُ ‏"‏ ‏.‏

இதைப்பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இரவில் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் யாராவது ஒருவர் நபி (ஸல்) அவர்களை பாதுகாத்து வந்த நிலையில்,
தூதரே! நமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்து சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையெனில் அவனரடைய தூதுச் செய்தியை எடுத்துச் சொன்னவராக நீர் ஆக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 5:67) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கியவுடன் நபி (ஸல்) தாங்கள் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து தலையை வெளியே நீட்டி ""மக்களே! என்னிடமிருந்து திரும்பிச் செல்லுங்கள்! அல்லாஹ் என்னை நிச்சயமாக பாதுகாத்து விட்டான்'' என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ ( 3046 )

மனிதர்களில் இருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான் என்ற இவ்வசனம் இறங்கியதற்கு பிறகு தன்னைப் பாதுகாக்க ஆட்களை  நியமிக்கவில்லை. கோட்டை கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. வாயிற்காப்போன் யாரையும் வைத்திருக்கவில்லை. உயிரை காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. வீதியில் மக்களோடு மக்களாக சாதாரணமாக நடமாடினார்கள். போர்க்களங்களிலும் பங்கெடுத்தார்கள். மற்றவர்களை போல் உத்தரவு போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல் நேருக்கு நேர் ஆயுதம் தாங்கி போரிட்டதால் நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். கொல்லப்படுவதற்கான வாய்ப்பு எதிரிகளுக்கு கிடைத்த போதிலும் அவர்களை யாராலும் கொல்ல முடியவில்லை.

புனித மரணத்தில் இருந்த பேரவாவும், சுவனபதியை அடைய வேண்டுமென்ற பேராசையும் நபி (ஸல்) அவர்களை மரணத்திற்கு அஞ்சாதவர்களாக ஆக்கியிருந்த போதிலும் ""அல்லாஹ் மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவான்'' என்ற இறைவாக்கின் மீதுள்ள அளவுக்கதிகமான நம்பிக்கை நபிகளாரை மரணமெய்துவதற்கு உரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் கூட எவ்விதப் பாதுகாப்பும் இன்றி துணிச்சலாக செயல்பட வைத்தது என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.

أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَ أَنَّهُ، غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تَحْتَ سَمُرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ فَقَالَ ‏"‏ إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَىَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهْوَ فِي يَدِهِ صَلْتًا ‏"‏‏.‏ فَقَالَ مَنْ يَمْنَعُكَ مِنِّي فَقُلْتُ ‏"‏ اللَّهُ ‏"‏‏.‏ ثَلاَثًا وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ‏.‏
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தயங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி(ஸல்) அவர்கள், 'இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், 'என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?' என்று கேட்டார். நான் 'அல்லாஹ்' என்று (மூன்று முறை) கூறினேன்' என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

 நூல் : புஹாரி ( 2910, 2913 , 4139 )

""அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்'' என்ற வசனத்தின் மீதுள்ள நம்பிக்கையே நபிகளாரை உஹதுப் போர்க்களங்களில் சந்திக்கும் சக்தியைக் கொடுத்தது. உஹதுப் போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய போராகும். அப்போரில் தான் தங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என நம்பி ஃகனீமத் பொருட்களின் மீதுள்ள ஆசையால் நபிகளாரை சுற்றியிருந்த தோழர்கள் ஓடிப் போய்விட, பல் உடைக்கப்பட்டு, பலத்த காயங்களோடு தன்னந்தனியே எதிரிகளிடம் மாட்டிக் கொண்டார்கள். ஆயுதங்களைப் பயன்படுத்தாமலேயே நபி (ஸல்) அவர்களை அன்றய தினம் கொன்று இருக்க முடியும். ஆனால் கொல்ல முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் தன்னை இறைத்தூதர் என்றும், மக்களால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றம் பகிரங்கமாக அறிவித்துவிட்டே போர்க்களங்களில் கலந்து கொண்டார்கள். இவரைக் கொலை செய்திருந்தால் ""இவர் இறைத்தூதர் அல்ல'' என்று நிரூபணமாகி இருக்கும். ஆனால் அன்றைய எதிரிகளால் இதைச் செய்ய முடிந்ததா?

""மனிதர்களிடமிருந்து இறைவன் உம்மைக் காப்பாற்றுவான்'' என்ற இறைவாக்கின் மீதுள்ள அபாரமான நம்பிக்கையின் காரணமாகவே நபிகளால் தனது நாட்டிற்கு ஏதோ ஒரு ஆபத்து என மக்கள் பயந்த போது கூட, பாதுகாப்பிற்கு ஆட்களை எதிர்பார்க்காமல் தன்னந்தனியே எதிர் கொண்டார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் மூலம் அறியலாம்.

عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ لَيْلَةً فَخَرَجُوا نَحْوَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدِ اسْتَبْرَأَ الْخَبَرَ، وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ وَفِي عُنُقِهِ السَّيْفُ وَهْوَ يَقُولُ ‏"‏ لَمْ تُرَاعُوا لَمْ تُرَاعُوا ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ وَجَدْنَاهُ بَحْرًا ‏"‏‏.‏ أَوْ قَالَ ‏"‏ إِنَّهُ لَبَحْرٌ ‏"‏‏.‏
அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். எனவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்துவிட்டு அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், 'பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்' என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு, 'நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்' என்று கூறினார்கள். அல்லது, 'இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது' என்று கூறினார்கள்.

 நூல் : புஹாரி ( 2908 )

அறியாமை காலத்தில் புரையோடிப் போயிருந்த வட்டித் தொழிலை வேரோடும், வேரடி மண்ணோடும் நபி (ஸல்) அவர்கள் ஒழித்தன் காரணத்தால் அதனையோ தனது குலத் தொழிலாக செய்துவரும் யூதர்கள் நபி (ஸல்) அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் மேற்கண்ட முயற்சிகளில் ஒன்றுதான் இந்தச் சம்பவம்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ يَهُودِيَّةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا فَجِيءَ بِهَا فَقِيلَ أَلاَ نَقْتُلُهَا‏.‏ قَالَ ‏ "‏ لاَ ‏"‏‏.‏ فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

 நூல் : புஹாரி ( 2617 )

நபி (ஸல்) அவர்களின் தொண்டையின் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பு தொடர்ந்து இருந்தும் கூட அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதவாறு இறைவன் பாதுகாத்து தனது வாக்கை, நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்தினான். எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளிலிருந்தும் நபிகளாரைக் காப்பாற்றிய இறைவன் அவர்களை இயற்கையாகவே மரணிக்கவும் செய்தான்.

""மனிதர்களிடமிருந்து இறைவன் உம்மைக் காப்பாற்றுவான்''. இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் நபிகளால் என்றோ கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாததே அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு சான்றாக அமைகிறது.


No comments:

Post a Comment