Saturday, December 9, 2017

அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபனிதல் பாகம் 07




அல்லாஹ்வின் கட்டளைக்கு பிரபஞ்சம் அடிபனிதல்


                பிரபஞ்சத்திலுள்ள வானங்கள், பூமி, கோள்கள், நட்சத்திரங்ள், ஊர்வணங்கள், மரங்கள், சகதி, தரை, கடல், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உட்பட அனைத்துப் படைப்பினங்களும் அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றன. அவனின் ஆக்கல் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. இதனை அல்லாஹ்வின் வேத வாக்குகள் உறுதி செய்கின்றன. அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا  (آل عمران\83)


“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன. (3/83)


بَل لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ كُلٌّ لَّهُ قَانِتُونَ ﴿ البقرة ١١٦﴾

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குக் கீழ்படிந்து நடக்கின்றன. (2/116)

وَلِلَّـهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ ﴿٤٩النحل﴾

“வானங்களிலும், பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் பெருமையடிப்பதில்லை. (16/49)


أَلَمْ تَرَ أَنَّ اللَّـهَ يَسْجُدُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِّنَ النَّاسِ ۖ (الحج\18)


“வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்ளும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீங்கள் காணவில்லையா?” (22/18)


وَلِلَّـهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ ۩ ﴿الرعد١٥﴾


“வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மேலும் காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வழிப்பட்டே தீரும். (13/15)


                சர்வ உலகும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப் பட்டவைகளே. அவனின் அதிகாரத்திற்குக் கீழ்படிந்தவை. அவனின் நாட்டத்திற்கும், கட்டளைக்கும் இசைவாகவே இயங்குகின்றன. எனவே அவை எதுவும் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது அவையவைகளின் கடமைகளைக் கவணமாக நிறைவேற்றி அதன் மூலம்  நல்ல பெறுபேறுகளைத் தருகின்றன. இன்னும் தம்மைப் படைத்த சிருஷ்டி கர்த்தா எவ்வித குறையும், இயலாமையும் அற்றவன் என்று அவனைத் தூய்மைப் படுத்துகின்றன. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.


  تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَـٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ(الإسراء\44)


“ஏழு வானங்களும், பூமியும் இவ்வற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும் அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை.​​” (17?44)


                 பேசுகின்ற, பேசாத, உயிருள்ள, உயிரில்லாத என்ற பாகுபாடின்றி சிருஷ்டிகள் எல்லாமே அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்றன. அவனின் ஆக்கல் கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. மேலும் அல்லாஹ் சகல குறைகளை விட்டும் தூய்மையாவன் என்று அவை தங்களின் நாவாலும், செயலாலும் தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே அறிவுள்ளவன் இந்த சிருஷ்டிகளைப் பற்றிச் சிந்திக்கின்ற போதெல்லாம் அவற்றை அல்லாஹ்தான் படைத்தான். என்பதையும், அவை அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவை என்பதையும், உலக விவகாரங்களை ​அவை தாமாகவே ஒழுங்கு படுத்திக் கொள்ளவில்லை​, மாறாக எல்லா காரியங்களையும் அல்லாஹ்தான் ஒழுங்கு படுத்தி அவற்றை இயங்கச் செய்கின்றான். எனவே அவனின் கட்டளைக்கு மாறு செய்யாது அவனின் கட்டளைப்படி அவை இயங்குகின்றன என்பதையும் அறிந்து கொள்வான். எனவே எல்லா சிருஷ்டிகளும் இயல்பாகவே அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றன என்பது தெளிவு.


                ​“உயிர்னங்கள் யாவும் அல்லாஹ்வுக்கு அடிபணிகிண்றன, அவனுக்கு வழிபடும்படி அவை நிர்பந்திக்கப்பட்டுள்ளன என்றால்! அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன,” என்று இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவையாவன:
·         தங்களின் தேவைகள் அவனிடமே இருக்கின்றன, என்பதை அவைகள் அறிந்து வைத்திருப்பதால்.
·         அவைகளின் மீது செல்வாக்கு செலுத்தும் அல்லாஹ்வின் வல்லமைக்கும், அவனின் நாட்டத்திற்கும் அவைகள் கட்டுப்படவும், அடிபணியவும் வேண்டியிருப்பதால்
·         நெருக்கடிகள் ஏற்படும் போது அவனிடம் அவைகள் கையேந்த வேண்டி யிருப்பதால்.
எனவே ஒரு முஃமின் தன் சுய விருப்பத்துடன் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவான். அவ்வாறே அல்லாஹ்வின் விதியின் படி அவனுக்கு ஏற்படும் தொல்லைகளையும் கஷ்டங்களையும் அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் பொறுமையுடனும் விருப்பத்துடனும் அதனை அவன் ஏற்றுக் கொள்வான். இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைய விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் சுபாவமுடையவனாகவே ஒரு முஃமின் இருக்கின்றான். மேலும் ஒரு காபிரைப் பொருத்த மட்டி​ல் அவன் அல்லாஹ்வின் ஆக்கல் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவனாவான். மேலும் உலகின் மற்றப் பொருள்கள் யாவும் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்கின்றன என்றால், அவை அவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டுள்ளன. மேலும் அவை தம் நிலைக்குத் தக்கவாறு அல்லாஹ்வுக்குப் பொருத்தமான முறையில் ஸுஜூது செய்கின்றன என்பதாகும். அவ்வாறே அல்லாஹ்வுக்கு முன்னால் அவை அடிபணிகின்றன, ​தஸ்பீஹாத்துக்கள் செய்கின்றன, என்பது அதன் சிலேடைப் பொருளில் அல்லாமல் அதன் உண்மையான பொருளின் பிரகாரம் அவைகளின் நிலைமைக்குத் தக்கவாறு அவை உன்மையாகவே இக்கருமங்களைச் செய்து வருகின்றன என்பது,  கவணத்தில் கொள்ளத் தக்கதாகும். மேலும்

أَفَغَيْرَ دِينِ اللَّـهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ ﴿٨٣ آل عمران﴾

“அல்லாஹ்வுடைய மார்க்கமல்லாததையா இவர்கள் விரும்புகின்றனர்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்துமே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன. மேலும் அவை அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.” (3/83)

இந்த திருவசனத்திற்கு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் விளக்கம் தரும் போது  “சகல சிருஷ்டிகளும் அவை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவை அனைத்தும் அல்லாஹ்வின் முழுமையான அடிமைகள். அவை அவனின் ஒழுங்குபடுத்தலுக்கு இசைவாக வழிநடாத்தப்படுகின்றன. ஆகையால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவை அல்லாஹ்வின் நியதிக்கு அடிபணிந்தவையே. மேலும் எந்த வொரு சிருஷ்டியும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும், நியதிக்கும், தீர்ப்புக்கும் அப்பால் செல்ல முடியாது. அவனின் உதவியின்றி எது வொன்றும் அசையவும் முடியாது எதனையும் செய்யும் சக்தியும் அதனிடம் இல்லை. மேலும் சர்வலோகத்தினரின் இரட்சகனும், அதன் உரிமையாளனும் அவனே. எனவே, தா​​ன் விரும்பியபடி அவற்றை நடாத்தக் கூடியவனும் அவனே. அவை அனைத்தையும் படைத்தவனும் அவனே. அவற்றை அவனே வடிவமைத்தான். அவனல்லாத அனைத்தும் பரிபாலிக்கப்படுகின்ற வைகளாகவும், சிருஷ்டிக்கப்பட்டவைகளாகவும், உருவாக்கப்பட்ட வைகளாகவும், ​தேவையுடையனவாகவும், அடிமைப் படுத்த பட்ட வைகளாகவும், அடக்கி ஒடுக்கப்பட்டவை களாகவும் இருக்கின்றன. ஆனால் அல்லாஹ்வோ தூய்மையானவன். அவன் ஒருவன், அடக்கி ஆளுபவன், சிருஷ்டிப்பவன், உருவாக்குபவன், வடிவமைபவன். என்ற படியால்  “படைப்புக்கள் யாவும் அவை விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிகின்றன, என்பதை இத்திரு வசனத்தின் மூலம் அல்லாஹ்  எடுத்துக் காட்டியிருக்கிறான்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


No comments:

Post a Comment