Saturday, December 9, 2017

அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும் நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை பாகம் 08



அல்லாஹ்வின் இருப்பையும், அவன் ஒருவன் என்பதையும்  நிரூபிப்பதில் அல்குர்ஆனின் அணுகு முறை;

                அல்லாஹ்வின் இருப்பும் அவன் ஒருவனே என்பதும் உறுதியானதே. எனினும் இதன் மீது சந்தேகம் கொண்டுள்ள மனிதனின் பகுத்தறிவும், பிரதிவாதிகளும் திருப்தி அடையும் படியான ஆதாரங்களை அல்குர்ஆன் முன் வைத்துள்ளது. அவ்வாதாரங்களை அல்குர்ஆன் முன்வைக்கும் போது  இயற்கை நிகழ்வுகளை எடுத்துக் காட்டி, சீரான பகுத்தறிவு வாதத்தைக் கையாண்டுள்ளது.  இது அல் குர்ஆனின் ஒரு சிறந்த அணுகு முறையாகும். அத்தகைய அத்தாட்சிகளில் சில வருமாறு:
·         காரண கர்த்தா இல்லாமல்  காரியம் நிகழாது.
   இது தர்க்க சாஸ்திரத்தில் வரும் ஒரு விதி. இது இயற்கையாகவே யாவரும் அறிந்த ஒருவிடயம். இதனை ஒரு சிறுவன் கூட அறியாமல் இருக்க மாட்டான், எனவேதான் அவனை யாரேனும் அடித்து விட்டால் அடித்தவனை அவன் காணாத போதும் “என்னை அடித்தவன் யார்?” என்று கேட்பான். அப்போது உன்னை எவரும் அடிக்கவில்லை என்று கூறினால், அடிக்கின்ற ஒருவன் இல்லாமல் அடி விழ இயலுமா? என்பதை ஏற்றுக் கொள்ள அவன் அறிவு மறுக்கிறது. ஆனால் அவனிடம் இன்னார்தான் உன்னை அடித்தான் என்று கூறினாலோ அன்னவனை அடிக்கும் வரையில் அவன் அழுது கொண்டிருப்பான். இந்த தத்துவத்தையே அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:


أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ ﴿ الطور٣٥

(
“அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?” (52/35)

சகலரும் அறிந்த இந்த வாதத்தை எவரும் மறுக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்து முகமாக அல்லாஹ், أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் உண்டாகி விட்டனரா? அதாவது அவர்கள் தங்களை சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தா ஒருவனும் இல்லாமல் உண்டாகிக் கொண்டார்களா? அல்லது  அவர்கள் தம்மைத் தாமாகவே படைத்துக் கொண்டார்களா? என்று கேள்வி எழுப்புகின்றான், ஏனெனில் இந்த இரண்டு விடயங்களும் அசாத்தியமானவை. அப்படியாயின் அவர்களைப் படைத்த ஒருவன் இருக்கின்றான், அவன் அல்லாஹ் ஒருவனே என்பதும்,  அவனையன்றி வேறு எந்தவொரு சிருஷ்டி கர்த்தாவும் இல்லை என்பதுவும் இந்த வினாவின் மூலம் நிரூபனமாகிறது. மேலும்

هَـٰذَا خَلْقُ اللَّـهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِن دُونِهِ ۚ (11    لقمان)


“இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைக ளாகும். அவனையன்றி அவைகள் எதனைப் படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்.” (31/11)


أَمْ جَعَلُوا لِلَّـهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ اللَّـهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ﴿١٦الرعد﴾

“அல்லது அவர்கள் இனணயாக்கிக் கொண்டிருப்பவைகள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்து இருக்கின்றவா? அவ்வாறாயின் எல்லா சிருஷ்டிகளும் ஒரே மாதிரியாக ஆகிவிடுமே, (​​அப்போது ஒவ்வொன்றையும் படைத்தவன் யார் என்று அறிய வாய்ப்பில்லாது போய்விடும். அவ்வாறும் இல்லையே! ஆகவே) நீங்கள் கூறுங்கள் ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! அவனே அனைத்தையும் அடக்கி ஆளுகிறான்”(13/16)


إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّـهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ ۖ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ ﴿٧٣الحج﴾


“அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்த போதிலும் ஒரு ஈயைக் கூட படைக்க முடியாது. ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்ட போதிலும் அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (ஏனெனில்)) தேடுபனும் தேட்டப்படுகின்றவனும் பலவீனமானவர்களே” (22/73)


  أَفَمَن يَخْلُقُ كَمَن لَّا يَخْلُقُ ۗ أَفَلَا تَذَكَّرُونَ ﴿١٧النحل﴾


“எவன் படைக்கின்றானோ அவன் படைக்க முடியாதவனைப் போலாவானா! நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (16/17)




وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّـهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ ﴿٢٠النحل﴾


“எவற்றை அவர்கள் அழைக்கின்றார்களோ அவைகளால் யாதொன்றையும் படைக்க முடியாது. அவைகளுமோ படைக்கப் பட்டவைகளாக இருக்கின்றன” (16/20)


                என்று இவ்வாறு திரும்பத் திரும்ப அல்லாஹ் சவால் விட்ட போதிலும் அந்த தெய்வங்கள் எதையேனும் சிருஷ்டித்திருக்கின்றன என்று எவரும் வாதிட வில்லை. மேலும் அதனை அவர்கள் நிரூபிப்பது என்பது ஒரு பக்கமிருக்க வெறுமனே வாதிடவும் கூட அவர்களால் முடிய வில்லை. ஆகையால் எல்லாவற்றையும் படைத்தவன் பரிசுத்தமான அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணை ஒன்றுமில்லை என்பது உறுதியாகி விட்டது.

·          உலக விவகாரம் யாவும் ஒழுங்காகவும்​ நுணுக்கமாகவும் அமையப் பெற்றிருத்தல்.
இது எல்லா விவகாரங்களையும் ஒழுங்கு படுத்தி நிர்வகிக்கும் இறைவன் ஒருவனே. அவனுக்கு இணை எதுவுமில்லை, அவனை யாரும் எதிர்த்திட முடியாது என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும். அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.


 مَا اتَّخَذَ اللَّـهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَـٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَـٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّـهِ عَمَّا يَصِفُونَ ﴿ المؤمنون٩١﴾


“அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனும் இல்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இவைனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர்” (23/91)  எனவே உண்மை இறைவன் படைக்கின்ற வனாகவும், நினைத்ததை செய்கின்றவனாகவும் இருப்பது அவசியம். ஏனெனில் அவனுடைய ஆட்சியில் அவனுடன் கூட்டாக இன்னொருவன் இருப்பானாகில் அவனும் படைக்கின்றவனாகவும், நினைத்ததை செய்கின்றனாகவுமே இருப்பான். அச்சமயம் பரஸ்பரம் ஒவ்வொரு இறைவனும் தன் அதிகாரத்தில் மற்றொரு இறைவன் கூட்டாளியாக இருப்பதை விரும்ப மாட்டான். எனவே இயலுமாயின் அவன் தன் கூட்டாளியை அடக்கி ஆட்சி அதிகாரத்தையும் கடவுள் தன்மையையும் தனக்கு மாத்திரம் உரியதாக ஆக்கிக் கொள்வான். ஆனால் இது சாத்தியமில்லாத போது உலகிலுள்ள மன்னர்கள் தனித்தனி ஆட்சிகளை நிறுவிக் கொண்டிருப்பது போன்று அந்த கடவுள்களும் தங்களின் அதிகாரத்தையும், சிருஷ்டிகளையும் எடுத்துக் கொண்டு தங்களின் தனி ஆட்சியை அமைத்துக் கொள்வர்.. அப்பொழுது பிரிவினை ஏற்படும். அத்துடன் மூன்று காரியங்களில் ஏதாகிலும் ஒன்று நிகழும். அவையாவன:
·         ஒருவன் மற்றவனை அடக்கி அவனுக்கு ஆட்சி அதிகாரம் எதனையும் கொடுக்காமல் அதிகாரம் அனைத்தையும் தனக்கு சொந்த மாக ஆக்கிக் கொள்ளல்.
·         பரஸ்பரம் ஒவ்வொருவரும் ஆட்சியை பங்கு போட்டுத் தனி ஆட்சி ஆட்சி அமைத்துக் கொள்வர். அப்பொழுது பிரிவினை உண்டாகி விடும்.
·         இரண்டு ஆட்சியும் ஒருவனின் அதிகாரத்தின் கீழ் வ​​ருதல், அப்பொழுது அவன் தான் நினைத்ததை எல்லாம் செய்யும் உண்மை இறைவனாக இருக்க, மற்றவன் அவனுக்கு அடிமையாகி விடுவான்.
  இதுதான் நிதர்சனம். ஏனெனில் உலக விவகாரங்களை ஒழுங்கமைத்து நிர்வகிக்கக் கூடிய ஆட்சியாளன் ஒருவனாகவும் அவனை எதிர்க்க எவனும் இல்லாமலும் இருந்து அவன் அதன் நிகரில்லாத தனிப் பெரும் உரிமையாளனாக இருந்தால் உலகில் எந்த வொரு பிரிவினையும், இடைஞ்சலும் ஏற்படமாட்டாது. 

No comments:

Post a Comment