தெய்வீகத் தன்மையில் ஏகத்துவம்
உறுதி படுத்துவதற்கு
பரிபாலன விடயத்தில் ஏகத்துவம்
நிலை பெறுவது அவசியம்
அதாவது அல்லாஹ்வின் கைவசமே சர்வ உலகின் அதிகாரமும் உண்டென
நம்பும் ஒருவன் படைக்கிறவனும், உணவளிப்பவனும், உலகை நிர்வகிப்பவனும் அந்த
அல்லாஹ்வையன்றி வேறு எதுவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வான். அத்துடன் சகல
இபாதாக்களும் - வழிபாடுகளும் அவனுக்கேயல்லாது வேறு எவருக்கும் பொருந்தாது
என்பதையும் அவன் உறுதி படுத்துவான்.
இதுவே
توحيد الألوهية தெய்வீகத்
தன்மையில் ஏகத்துவமாகும். மேலும் அரபு மொழியில் إله எனும் சொல்லின்
பொருள் வணக்கத்திற்குறிய என்பதாகும். இதன்படி الألوهية என்பது “இபாதா”
வணக்கம் எனும் பொருளைத் தரும். ஆகையால் அல்லாஹ்வையன்றி வேறு எவரும்
அழைக்கப்படலாகாது, அவனிடமன்றி வேறு எவரிடமும் அபயம் தேடலாகாது, அவனிடமன்றி வேறு
எவர் மீதும் “தவக்கல்” நம்பிக்கை வைத்தலாகாது. மேலும் அறுத்துப் பலியிடுதல்,
நேர்ச்சை வைத்தல் போன்ற ஏனைய சகல வழிபாடுகளும் அவனுக்கே அல்லாது வேறு எவருக்காவும்
நிறைவேறப்படலாகாது. எனவே توحيد
الربوبية அதிகார
விடயத்தில் ஏகத்துவத்தை உறுதிப்படுத்துவதானது توحيد الألوهية தெய்வீகத்
தன்மையில் ஏகத்துவம் அவசியம் என்பதை உணர்த்த தக்கதாகும். எனவேதான் அல்லாஹ்
தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை ஏற்க மறுப்போரின் நிலை பிழை என்பதை, அவர்கள்
அதிகார விடயத்தில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டி
நிரூபிக்கின்றான்.. உதாரணமாக அல்லாஹ்வின் இந்த வாக்கைக் கவணியுங்கள்:
يَاأَيُّهَا
النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ
لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿٢١﴾ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا
وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ
الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّـهِ أَندَادًا وَأَنتُمْ
تَعْلَمُونَ ﴿٢٢البقرة﴾
“மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும்
படைத்த இறைவனையே வணங்குங்கள். நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்.”
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு
முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து அதனைக் கொண்டு
புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே நீங்கள்
தெளிவாக அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்” (2 - 21,22)
இவ்வசனத்தில் தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை நிலை
நிறுத்தும் படி, அதாவது அல்லாஹ் ஒருவனையே வணங்கும் படி அல்லாஹ் உத்தரவிடுகின்றான்.
மேலும் முற்கால, பிற்கால எல்லா மனிதர்களையும், வானம் பூமியையும் அவையிரண்டுக்கும்
இடையே இருப்பவைகளையும் படைத்தவன், காற்றை வசப்படுத்தித் தந்தவன், மழையைப்
பொழிவித்தவன், பயிர்களை முளைக்கச் செய்தவன், மனிதர்களின் ஆகாரமாகிய கனிகளை
வெளிப்படுத்தியவன், அல்லாஹ் ஒருவனாகவே இருக்கின்ற படியாலும், இதனை எல்லாம்
அவனல்லமால் வேறு எவராலும் செய்ய இயலாது என்ற படியாலும் அவனுக்கு எவரையும்
இணையாக்கக் கூடாது, அது பொருத்தமற்ற செயல் என்று அல்லாஹ் வாதிடுகிறான்.
எனவே توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை
உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற இயற்கையான அத்தாட்சியாகவும், வழியாகவும் توحيد الربوبية அதிகார விடயத்திலான ஏகத்துவம்
விளங்குகிறது. . ஏனெனில் மனிதனுக்கு
தன்னைப் படைத்தவனுடனும், தனக்கு நன்மை தீமை ஏற்படுத்தக்கூடிய காரணத்துடனுமே முதலில்
தொடர்பு ஏற்படுகிறது. அதன் பின்னரே அவன் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தும் படியான,
அவனைத் திருப்திப்படுத்தும் படியான தனக்கும் அவனுக்கும் இடையிலான தொடர்பை
பலப்படுத்தக் கொள்ளும் படியான வழிகளின் பால் அவன் கவணம் செலுத்துவான்.
எனவே توحيد الربوبية அதிகார விடயத்தில் ஏகத்துவம், توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை
உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வாசலாக இருக்கின்ற படியால் தான் அல்லாஹ் இதனை
முன்னிறுத்தி முஷ்ரிகீன்களுடன் வாதிடுகிறான். மேலும் இதே அடிப்படையில் அவர்களுடன்
வாதிடும்படி தன் தூதருக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அல்லாஹ் இவ்வாறு
கூறுகிறான்:
قُل
لِّمَنِ الْأَرْضُ وَمَن فِيهَا إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨٤﴾ سَيَقُولُونَ
لِلَّـهِ ۚ قُلْ أَفَلَا تَذَكَّرُونَ ﴿٨٥﴾ قُلْ مَن رَّبُّ السَّمَاوَاتِ
السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ﴿٨٦﴾ سَيَقُولُونَ لِلَّـهِ ۚ قُلْ
أَفَلَا تَتَّقُونَ ﴿٨٧﴾ قُلْ مَن بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ
وَلَا يُجَارُ عَلَيْهِ إِن كُنتُمْ تَعْلَمُونَ ﴿٨٨﴾ سَيَقُولُونَ لِلَّـهِ ۚ
قُلْ فَأَنَّىٰ تُسْحَرُونَ ﴿٨٩المؤمنون﴾
“நீங்கள் அவர்களிடம் பூமியும் அதிலுள்ளவை களும் யாருக்குரியன?
நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்” என்று சொல்லுங்கள். அதற்கவர்கள்,
அல்லாஹ்வுக்குரியனவே” என்று கூறுவார்கள். “நீங்கள் நல்லுணர்ச்சி பெறமாட்டீர்களா?
என்று நீங்கள் கேளுங்கள். அன்றி “ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும்
சொந்தக்காரன் யார்?” என்று கேளுங்கள். அதற்கவர்கள் “அல்லாஹ்வுக்குரியனவே” என்று
கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?” என்று கேளுங்கள்.
அன்றி “எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? அவனே
பாதுகாக்கின்றான். அவனிடமிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. நீங்கள்
அறிந்திருந்தால், அப்பேற்பட்ட அவன் யார் என்று கேளுங்கள்.” அதற்கவர்கள்
“அல்லாஹ்வுக்குரியது தான்” என்று கூறுவார்கள். அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள்
அறிவை இழந்து விட்டீர்கள்?” என்று சொல்லுங்ள்” (23 - 84 முதல் 89 வரை)
ذَٰلِكُمُ
اللَّـهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ خَالِقُ كُلِّ شَيْءٍ
فَاعْبُدُوهُ ۚ ﴿الأنعام١٠٢﴾
“இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து
பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற் குரியவன் அவனைத் தவிர வேறு
ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன், ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள்”
(6/102)
எனவே அதிகார விடயத்தில் ஏகனாக இருக்கின்ற அல்லாஹ்தான் வணக்கதிற்குரிய ஒருவனாகவும் இருக்க முடியும்
என்று அல்லாஹ் உறுதிபட கூறுகின்றான். .மேலும் சிருஷ்டிகளை அல்லாஹ் படைத்ததன்
நோக்கமும் توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் அதாவது வணக்க வழிபாடுகளில்
ஏகத்துவத்தை நிலை பெறச் செய்வதற்காகத்தான் . அல்லாஹ்வின் வாக்கு இவ்வாறு கூறுகிறது:
وَمَا
خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ ﴿٥٦الذاريات﴾
“ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்கேயன்றி நான்
படைக்கவில்லை” (51/56)
இவ்வசனத்தில் வந்துள்ள يَعْبُدُونِ எனும் சொல்லின் கருத்தாவது வழிபாடுகளில் என்னை
- அதாவது அல்லாஹ்வை ஏகனாக்க வேண்டும் என்பதாகும். எனவே தெய்வீகத் தன்மையில்
ஏகத்துவத்தை உறுதி படுத்தி அதனை நிலை நிறுத்தாது, வெறும் அதிகார விடயத்தில்
மாத்திரம் ஏகத்துவத்தை உறுதி படுத்துவதன் மூலம் ஒரு அடியான் ஏகத்துவ வாதியாக
ஆகிவிடமாட்டான். அவ்வாறில்லையெனில் அதிகார ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டிருந்த
முஷ்ரிகீன்களும் ஏகத்துவ வாதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பர்.
ஆனால்
அப்படியில்லை. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் உள்வாங்கப் படவில்லை. மேலும் அவர்கள்
அல்லாஹ் தான் படைக்கின்றவன், உணவளிப்பவன், உயிர் கொடுப்பவன், மரணிக்கச்
செய்கின்றவன் என ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் நபியவர்கள் அந்த முஷ்ரிக்குகளுடன்
யுத்தம் செய்தார்கள், ஏனெனில் அவர்கள் توحيد الألوهية தெய்வீகத் தன்மையில் ஏகத்துவத்தை
நிராகரித்தார்கள் என்பதற்காகத்தான். அந்த முஷ்ரிக்குகளின் நிலையை அல்லாஹ்வின்
வாக்கு தெளிவு படுத்துகிறது.
وَلَئِن
سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّـهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ ﴿الزخرف٨٧﴾
“இவர்களைப் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின் அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக்
கூறுவார்கள். அவ்வாறாயின் இவர்கள் எங்கு விரண்டோடுகிறார்கள்?”(43/87)
وَلَئِن
سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ
الْعَزِيزُ الْعَلِيمُ ﴿٩الزخرف﴾
“வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள்
அவர்களிடம் கேட்கும் பட்சத்தில், மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்தான் அவைகளைப்
படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.(43/9)
قُلْ
مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ
وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ
مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ اللَّـهُ ۚ (يونس\31)
“நீங்கள் “வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு
உணவளிப்பவன் யார்? செவிக்கும், பார்வைக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து
உயிருள்ளவற்றையும், உயிரள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் வெளிப்படுத்துபவன் யார்?
எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?” என்று கேளுங்கள்!
அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள்”(10/31)
இத்தகைய வசனங்கள் அலகுர்ஆனில் நிறைய இருக்கின்றன. எனவே
அல்லாஹ்வின் இருப்பை அல்லது எல்லாம் படைத்த அல்லாஹ்தான் உலகத்தை நிர்வகிக்கிறான்
என்பதை ஏற்றுக் கொள்வது தான் ஏகத்துவம் என்று
யாரேனும் வாதிட்டு அதனுடன் ஏகத்துவத்தைச் சுறுக்கிக் கொள்வானாகில் அவன்
நபிமார்கள் எந்த ஏகத்துவத்தின் பால் அழைப்பு விடுத்து வந்தார்களோ அந்த
ஏகத்துவத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவனாவான். மேலும் அதன் வழியின் ஊடாக
இலக்கை சென்றடையாமல் வழியில் நின்று கொண்டவன் ஒருவனைப் போனறவனே.
மேலும் தெய்வீகத் தன்மையின் சிறப்பம்சம் யாதெனில்: சகல அம்சத்திலும் பரிபூரணத்துவம் இருத்தல்
வேண்டும். எவ்வகையிலும் குறை எதுவும் இருக்கக்கூடாது என்பதாகும். அப்படிப்பட்ட
நிலையில் இருப்பவனே எல்லா வழிபாட்டுக்கும், வணக்கத்துக்கும் தகுதியானவன். எனவே
அவன் ஒருவனையே வழிபடல் வேண்டும், அவனையன்றி வேறு எவரையும் வழிப்படக்கடாது. மேலும்
பகுத்தறிவின்படியும், மார்க்கத்தின் படியும், இயற்கை நியதியின் படியம்
கவணிக்குமிடத்து கண்ணியப்படுத்தவும், அஞ்சி நடக்கவும், பிராத்திக்கவும், நன்மையை
எதிர்பார்க்கவும், பாவ மண்ணிப்புக் கோரவும், நம்பிக்கை கொள்ளவும், அபயம் தேடவும்,
மிகுந்த அன்புடன் பணிவு கொள்ளவும், தகுதியானவன் அல்லாஹ் ஒருவனேயன்றி வேறு எதுவும்
இதற்கு தகுதி பெறாது என்பது தெளிவு.
No comments:
Post a Comment